கோமதி
கோமதி

பாஜகவுக்கு வாக்களித்ததால் பெண் அடித்து கொலை செய்யப்பட்டாரா? - முன்விரோதத்தால் கொலை செய்யப்பட்டதாக போலீஸார் மறுப்பு

Published on

கடலூர்: கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகேயுள்ள பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் குடும்பத்துக்கும், அதேஊரைச் சேர்ந்த கலைமணி குடும்பத்துக்கும் 2021-ல் மாரியம்மன் கோயில் திருவிழாவின்போது தகராறு ஏற்பட்டது. இதில் ஜெயக்குமாரை தாக்கியது தொடர்பாக, கலைமணி மீது ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார். இதனால் இரு குடும்பத்தினருக்குமிடையே முன்விரோதம் இருந்துள்ளது.

இந்நிலையில், கடந்த 19-ம்தேதி மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு தினத்தன்று மாலை 6 மணியளவில் ஜெயக்குமார்(47), அவரது தம்பி ஜெய்சங்கர், மகள்ஜெயப்பிரியா ஆகியோர் வாக்களித்து விட்டு, பக்கிரிமானியம் தண்ணீர் தொட்டி அருகே வந்து கொண்டிருந்தனர்.

அப்போது கலைமணி, ரவி,பாண்டியன், அறிவுமணி ஆகியோர், ஜெய்சங்கர், ஜெயப்பிரியாவை தகாத வார்த்தைகளால் கிண்டல் செய்துள்ளனர். இதையடுத்து, ஜெயசங்கர், ஜெயக்குமார், அவரது மனைவி கோமதி (45), மகன்கள் சதீஷ்குமார், ஜெயப்பிரகாஷ் ஆகியோர் ஒரு கோஷ்டியாகவும், கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி,அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் ஆகியோர் மற்றொரு கோஷ்டியாகவும் சண்டையிட்டுக் கொண்டனர். இதில்கோமதிக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

அருகில் இருந்தவர்கள் அவரைஆண்டிமடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்த மருத்துவர்கள், கோமதி ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும், காயமடைந்த ஜெயக்குமார், ஜெயப்பிரகாஷ், சதீஷ்குமார் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, வீடு திரும்பினர்.

கொலை வழக்கு தொடர்பாக 10 பேர் மீது வழக்கு பதிவு செய்த ஸ்ரீமுஷ்ணம் போலீஸார், கலைமணி, ரவி, அறிவுமணி, மேகநாதன், தீபா, பாண்டியன், அருள்செழியன் மற்றும் ராஜா ஆகியோரைக் கைதுசெய்துள்ளனர்.

இதற்கிடையே, தனது மனைவி கோமதி தாமரை சின்னத்துக்கு வாக்களித்ததால், திமுகவினர் அடித்துக் கொன்று விட்டனர் என்று கூறி ஜெயக்குமார் கதறி அழுத வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

இதற்கிடையே, இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீமுஷ்ணம் போலீஸார் விளக்கம் அளித்துள்ளனர். அதில்,"ஜெய்சங்கரின் மகளை கிண்டல்செய்ததும், கலைமணிக்கும், ஜெயக்குமார், ஜெயசங்கருக்குமிடையே இருந்த முன்விரோதம் ஆகியவையே இந்த சம்பவத்துக்குக் காரணம் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதை சாட்சிகளின் வாக்குமூலங்களும் உறுதிப்படுத்தியுள்ளன. பாதிக்கப்பட்ட குடும்பத்தாரே, தங்களது புகாரில் 2021-ல் பதிவு செய்யப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவது குறித்த தகராறுதான், கோமதியின் இறப்புக்கு காரணம் என்று தெரிவித்துள்ளனர்" என்றுதெரிவித்துள்ளனர் மேலும், விசாரணை இறுதி அறிக்கை உரியகாலத்துக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

அண்ணாமலை மீது வழக்கு: இந்த கொலை தொடர்பாக கண்டனம் தெரிவித்துள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், "தாமரைக்கு வாக்களித்தற்காக ஒருவரை அடித்துக் கொல்வதா?’ என்று கேள்வி எழுப்பியிருந்தார். மேலும், காயமடைந்த ஜெயக்குமாரை பாஜக நிர்வாகிகள் நேரில்சந்தித்து ஆறுதல் கூறினர்.

இந்நிலையில் திமுக இளைஞரணி நிர்வாகி சாமிநாதன் கொடுத்த புகாரின்பேரில், அண்ணாமலை மீதுவதந்தியைப் பரப்புதல், இரு தரப்பினரிடையே மோதல் ஏற்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ்முஷ்ணம் போலீஸார் வழக்குபதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in