திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வீட்டின் பணிப்பெண் தற்கொலை முயற்சி

திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வீட்டின் பணிப்பெண் தற்கொலை முயற்சி
Updated on
1 min read

சென்னை: திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வீட்டின் பணிப்பெண் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது: திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, 20-க்கும் மேற்பட்ட படங்களைத் தயாரித்துள்ளார். தற்போது சூர்யா நடிக்கும் ‘கங்குவா’ என்ற படத்தை தயாரித்து வருகிறார். சென்னை தி.நகர் ஜெகஸ்வரன் தெருவில் உள்ள வீட்டில் குடும்பத்துடன் ஞானவேல் ராஜா வசித்து வருகிறார். இவரது வீட்டில் டாக்டர் தாமஸ் சாலையைச் சேர்ந்த லட்சுமி என்பவர் கடந்த 4 ஆண்டுகளாக பணிப் பெண்ணாக வேலை செய்து வந்தார்.

இந்நிலையில், ஞானவேல் ராஜா வீட்டில் சில தினங்களுக்கு முன்பு நகைகள் திருடு போனது. இது தொடர்பாக கடந்த 14-ம் தேதி மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. நகை திருட்டு விவகாரம் தொடர்பாக பணிப்பெண் லட்சுமி உள்ளிட்டவர்களிடம் விசாரணை நடத்தப் பட்டது. அதில், நான் நகைகளை திருடவில்லை என போலீஸாரிடம் லட்சுமி திரும்ப மறுத்துள்ளார்.

இருப்பினும், விசாரணைக்கு தேவைப்படும் போதெல்லாம் வர வேண்டும் என எழுதி வாங்கிக் கொண்டு அவரை அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இதனால், மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் லட்சுமி, தன்னுடைய வீட்டில் அரளி விதையை அரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர், அவரை மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையே, நகை திருட்டு வழக்கில் லட்சுமியை மிரட்டியதாலும், நகைகளை திருடியதாக எழுதி வாங்கியதாலும் மன உளைச்சலில் இருந்த லட்சுமி தற்கொலைக்கு முயன்றுள்ளார். எனவே ஞானவேல் ராஜா, அவரது மனைவி நேஹா மீது தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என லட்சுமி குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in