

சென்னை: சென்னை வடபழனியில் உள்ள மொபைல் சர்வீஸ் கடையை நடத்தி வந்த ஊர்மிள் எஸ்.டோலியா ( 50 ) என்பவர், தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாகவும், அம்மை நோய் பாதிப்பு காரணமாகவும் மன உளைச்சலில் இருந்துள்ளார்.
கடந்த 2018 மார்ச் 16-ம் தேதி தற்கொலை செய்து கொள்ளும் நோக்கில் தேனாம்பேட்டையில் உள்ள வீட்டில் இருந்து தனது 4 வயது இளைய மகன் மாதவ் எஸ்.டோலியாவை கடைக்கு அழைத்துவந்த ஊர்மிள், நள்ளிரவில் மாதவைகொலை செய்துள்ளார். பின்னர் தானும் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார். இந்நிலையில் கடை ஊழியர் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் ஊர்மிள் பிழைத்துக் கொள்ள அவரது மகன் இறந்து விட்டான்.
அதையடுத்து ஊர்மிள் மீது வழக்குப் பதிவு செய்து அவரை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ஜார்ஜ் டவுனில் உள்ள 16-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி கு.புவனேஸ்வரி முன்பாக நடந்தது. இந்நிலையில் தனது மகனை கொலை செய்த குற்றத்துக்காக ஊர்மிளுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ. 2 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.