

சென்னை: சென்னை ரயில்வே கோட்டத்தில் ஆர்பிஎஃப் போலீஸார் கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான 6 மாதங்களில் ரூ.12.36 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள், ஹவாலா பணம், தங்கம், வெள்ளிப் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.
சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி இந்த ஆண்டில் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட சிறப்பு சோதனைகள், தொடர் கண்காணிப்பு காரணமாக, உரிய ஆவணங்கள் இல்லாமல் ரயில்களில் கடத்தப்பட்ட ஹவாலா பணம், தங்கம், வெள்ளிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுதொடர்பாக 24 வழக்குகளில் 31 பேர் கைது செய்யப்பட்டனர். ரூ.4.27 கோடி மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.
ரயில்கள், ரயில் நிலையங்கள் வழியாக போதைப் பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க எடுக்கப்பட்ட தீவிர நடவடிக்கையில் ரூ.8.09 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள், புகையிலை, மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதில் குறிப்பாக, சர்வதேச சந்தையில் ரூ.5 கோடி மதிப்புள்ள 5 கிலோ எடையுள்ள உயர்ரக ‘ஹைட்ரோஃபோனிக் கஞ்சா’ பறிமுதல் செய்யப்பட்டது.
இதுதொடர்பாக 50 பேர் கைது செய்யப்பட்டனர். ரயில்கள், ரயில் நிலையங்களில் தனியாகத் தவித்த, வீட்டைவிட்டு ஓடிவந்த மற்றும் காணாமல்போன 46 சிறுமிகள் உட்பட மொத்தம் 242 சிறார்கள், ஆர்பிஎஃப் போலீஸாரால் மீட்கப்பட்டு, குழந்தைகள் நல அமைப்புகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
ஓடும் ரயிலில் ஏறவும் இறங்கவும் முயன்ற 8 பயணிகளின் உயிரை ஆர்பிஎஃப் காவலர்கள் துரிதமாக செயல்பட்டு காப்பாற்றியுள்ளனர்.
சந்தேகத்துக்குரிய நபர்களைக் கண்காணித்து, சிசிடிவி மற்றும் தமிழக ரயில்வே போலீஸாருடன் இணைந்து நடத்திய சோதனையில், பயணிகளின் உடைமைகளைத் திருடிய 110 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் இருந்து ரூ.19.06 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. ரயில்வே சட்ட விதிகளின்படி, மகளிர் பெட்டியில் சட்டவிரோதமாகப் பயணித்த 309 பேரிடம் இருந்து ரூ.4.07 லட்சமும், மாற்றுத் திறனாளிகள் பெட்டியில் பயணித்த 565 பேரிடம் இருந்து ரூ.5.11 லட்சமும் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே வளாகங்களில் அனுமதியின்றி வாகனங்களை நிறுத்திய 12,112 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ.55.32 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் சென்னை ரயில்வே கோட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.