

புதுடெல்லி: நொய்டாவில் சட்டவிரோதமாக பழைய இரும்பு பொருட்களை விற்று தாதாவான ரவி கானா தாய்லாந்து போலீஸில் சிக்கி உள்ளார்.
மேற்கு உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர் ரவி கானா. இவர் பழைய இரும்பு பொருட்களை சட்டவிரோதமாக விற்று வந்தார். படிப்படியாக 16 பேர் ரவுடி கும்பலுடன் சேர்ந்து சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டார். மிரட்டி பணம் பறித்தல் போன்ற செயல்கள் மூலம் கோடிக்கணக்கில் சொத்து சேர்த்தார். பல்வேறு வழக்குகள் தொடர்பாக இவரை நொய்டா போலீஸார் தேடி வந்தனர்.
இதுகுறித்து நொய்டா போலீஸார் நேற்று கூறியதாவது: ரவி கானா (எ) ரவீந்திர நாகர்,16 பேர் கும்பலுடன் சேர்ந்து தாதாவாக வலம் வந்தார். பழைய பொருட்களை சட்டவிரோதமாக வாங்குவது, விற்பது, மிரட்டி பணம் பறிப்பது போன்ற நடவடிக்கைகளில் அந்த கும்பல் ஈடுபட்டுவந்தது.
அதன் மூலம் கோடிக்கணக்கில் பணம் திரட்டியுள்ளனர். ஆள் கடத்தல், திருட்டு உட்பட அவர் மீது 11 வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த ஜனவரி 2-ம் தேதி ரவி கானா மீது உத்தர பிரதேச தாதாக்கள் மற்றும் சமூக விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதற்காக ரவி கானா கும்பலை சேர்ந்த 6 பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுடைய பழைய இரும்பு பொருட்களை குவித்து வைக்கும் பல குடோன்களுக்கும் போலீஸார் சீல் வைத்தனர்.
சமீபத்தில் ரவி கானா அவருடைய கூட்டாளிகளின் ரூ.120 கோடி மதிப்புள்ள சொத்துகளை போலீஸார் முடக்கினர். மேலும், தெற்கு டெல்லியில் ரூ.100 கோடி மதிப்புள்ள சொகுசு பங்களாவை தனது காதலி காஜலுக்கு ரவி கானா வழங்கியிருந்தார். அந்த பங்களாவில் கடந்த ஜனவரி மாதம் போலீஸார் சோதனை நடத்தினர். பின்னர் பங்களாவையும் முடக்கி வைத்தனர்.
ரவி கானா தலைமறைவான பிறகு அவருக்கு எதிராக ‘ரெட்கார்னர்’ நோட்டீஸும் பிறப்பிக்கப்பட்டது. தற்போது அவர் தாய்லாந்து போலீஸார் வசம் சிக்கிஉள்ளார். தாய்லாந்து போலீஸாருடன் நொய்டா போலீஸார் தொடர்ந்து பேசி வருகின்றனர். விரைவில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.