

சென்னை: கோயில் விழாவின்போது பெட்ரோல் குண்டு வீச முயன்ற ரவுடி மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தி போலீஸில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை கே.கே. நகர் கன்னிகாபுரத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (39) எலக்ட்ரீஷியன். இவர், கே.கே. நகர் கங்கையம்மன் கன்னியம்மன் கோயில் துணைத் தலைவராக உள்ளார். நேற்று முன்தினம் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு இக்கோயில் திருவிழா நிறைவாக தேரோட்டம் நடைபெற்றது.
நள்ளிரவில் தேரோட்டம் முடிந்து, எலக்ட்ரீஷியன் மணிகண்டன் மற்றும் கோயில் நிர்வாகிகள், கோயில் அருகே அமர்ந்திருந்தனர். அப்போது, மது போதையில் இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர், திருவிழாவுக்கு செட் அமைத்து, அதை கழட்டிக் கொண்டிருந்த ஆறுமுகம் என்பவரிடம் வீண் தகராறு செய்து கத்தியால் தாக்க முயன்றனர்.
அங்கிருந்த கோயில் விழா குழுத் தலைவர் முருகன் மற்றும் எலக்ட்ரீஷியன் மணிகண்டன் மற்றும் பகுதி மக்கள் சேர்ந்து அவர்களைத் தடுத்தனர். அப்போது, அவர்கள் பெட்ரோல் நிரப்பப்பட்ட மது பாட்டிலை வீச முற்பட்டனர். அதைத் தடுத்த மணிகண்டனின் உள்ளங்கையில் கத்தியால் வெட்டியதில் சிறிய காயம் ஏற்பட்டது.
மேலும், முருகனை கையால் அடித்துக் காயப்படுத்தினர். இதையடுத்து, அங்கிருந்தவர்கள் சேர்ந்து அவர்களில் இருவரை மடக்கிப் பிடித்து, அடித்து கே.கே. நகர் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். ஒருவர் தப்பிச் சென்றார்.
விசாரணையில் பிடிபட்டவர்கள், கே.கே.நகர் கன்னிகாபுரத்தை சேர்ந்த கோபி (19) மற்றும் அதேபகுதி விஜயராகவபுரத்தை சேர்ந்த மணிகண்டன் (23) என்பது தெரியவந்தது. கோபி மீது கே.கே.நகர், எம்.ஜி.ஆர். நகர் காவல் நிலையங்களில் 4-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.
பொதுமக்கள் தாக்கியதில், கோபியின் பின் தலையில் காயம் ஏற்பட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தலைமறைவாக உள்ள நபரையும் போலீஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.