

மும்பை: மும்பை விமான நிலையத்தில் மேற்கொண்ட பரிசோதனையில் ரூ.4.44 கோடி மதிப்பிலான 6.8கிலோ தங்கம், ரூ.2.02 கோடி மதிப்பிலான வைரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 4 பயணிகள் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து சுங்கத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கடந்த வார இறுதியில் மும்பைவிமான நிலையத்தில் பயணிகளிடம் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் மும்பையில் இருந்து பாங்காக் நோக்கி புறப்பட்ட இந்தியப் பயணி ஒருவரின் ட்ராலிபேக்கில் நூடுல்ஸ் பாக்கெட்டுகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.2.02 கோடி மதிப்பிலான வைரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து அந்தப் பயணி கைது செய்யப்பட்டார்.
கொழும்பில் இருந்து மும்பை வந்த வெளிநாட்டுப் பயணி ஒருவர் தனது உள்ளாடையில் 321 கிராம் தங்கக் கட்டிகளை மறைத்து வைத்திருந்தார். பிறகு அவை பறிமுதல் செய்யப்பட்டன.
இதுதவிர துபாய் மற்றும் அபுதாபியில் இருந்து வந்த தலா இருவர் பஹ்ரைன், தோகா, ரியாத், மஸ்கட், பாங்காக், சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து வந்த தலா ஒருவர் என 10 இந்தியர்களிடம் சோதனை நடத்தப்பட்டதில் அவர்கள் மறைத்து வைத்திருந்த ரூ.4.04 கோடி மதிப்பிலான 6.199 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. பிறகு இவர்களில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். இவ்வாறு சுங்கத் துறை கூறியுள்ளது.