

சென்னை: விமான நிலையத்தில் அமெரிக்கா பயணியிடம் இருந்து துப்பாக்கி குண்டு பறிமுதல் செய்யப்பட்டது. சென்னையில் இருந்து குஜராத் மாநிலம் அகமதாபாத் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று முன்தினம் இரவு புறப்பட தயாராக இருந்தது.
இந்த விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளையும், அவர்களின் உடைமைகளையும் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்து அனுப்பி கொண்டிருந்தனர். அப்போது வந்த அமெரிக்காவை சேர்ந்த ஆண்ட்ரூ யர்ஷன் (40) என்பவரின் கைப்பையை பாதுகாப்பு அதிகாரிகள் ஸ்கேனிங் மிஷினில் வைத்து சோதனை செய்தபோது, எச்சரிக்கை மணி ஒலித்தது.
இதையடுத்து, அந்த பையை அதிகாரிகள் சோதனை செய்தபோது துப்பாக்கி குண்டு இருந்தது. துப்பாக்கி குண்டை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவரது பயணத்தை ரத்து செய்து விசாரணை மேற்கொண்டனர்.
ஆவணங்கள் சமர்ப்பிப்பு: விசாரணையில், தொழிலதிபரான அவர், தன்னிடம் அமெரிக்காவில் பெறப்பட்ட துப்பாக்கி உரிமம் உள்ளதாகவும். துப்பாக்கியில் பயன்படுத்தக்கூடிய ஒரு குண்டு, தவறுதலாக கைப்பையில் இருந்துள்ளது என்றும் அதற்கான ஆவணங்களையும் காட்டியுள்ளார். விசாரணைக்கு பிறகு அவரை மற்றொரு விமானத்தில் அகமதாபாத் செல்ல அனுமதித்தனர்.