

சென்னை: பார் ஊழியரைத் தாக்கி, கத்தி முனையில் வழிப்பறியில் ஈடுபட்ட 7 பேரில் 3 பேர் பிடிபட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள மேலும், 4 பேரை தனிப்படை போலீஸார் தேடி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை பகுதியைச் சேர்ந்தவர் பிரதீப் (27). இவர், சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் வேலை செய்து கொண்டு அங்கேயே தங்கி வருகிறார்.
இவர் நேற்று முன்தினம் மாலை, மேற்கு மாம்பலம் ரெட்டிகுப்பம் ரோடு சீனிவாசா தியேட்டர் அருகே நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த சுமார் 7 பேர் கும்பல் பிரதீப்பை தாக்கி கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளனர்.
அவர் பணம் தர மறுக்கவே, அந்த நபர்கள் பிரதீப்பை கையால் தாக்கி அவர் வைத்திருந்த பணம் மற்றும் செல்போனை பறித்துக் கொண்டு தப்பினர்.
இதுகுறித்து அவர் குமரன் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதில், வழிப்பறியில் ஈடுபட்டதாக தி.நகர் கண்ணம்மாபேட்டையைச் சேர்ந்த ஸ்ரீஹரி(21) என்பவரைக் கைது செய்தனர். மேலும் கூட்டாளிகளான 2 சிறார்கள் பிடிபட்டுள்ளனர்.
தலைமறைவாக உள்ள மேலும் 4 பேரை தனிப்படை போலீஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர். விசாரணையில் கைது செய்யப்பட்ட ஸ்ரீஹரி மீது 3 கொலை முயற்சி வழக்குகள் உட்பட 5 குற்ற வழக்குகள் உள்ளது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.