

கோவை: அன்னூர் பகுதியில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்த ஒடிசா இளைஞரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை மாவட்டம் அன்னூர் பகுதியில் கஞ்சா சாக்லேட் விற்பனைக்கு வைத்திருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் பெரிய நாயக்கன் பாளையம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸார் கஞ்சப்பள்ளி பேருந்து நிறுத்தம் அருகே சென்று சோதனை மேற்கொண்டனர்.
அப்போது கஞ்சா சாக்லேட்டை விற்பனைக்கு வைத்திருந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ராஜேஷ் குமார் சேதியை ( 30 ) கைது செய்து, அவரிடமிருந்து 12.4 கிலோ கிராம் கஞ்சா சாக்லேட்டை பறிமுதல் செய்தனர். கைதான இளைஞர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இது தொடர்பாக, காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் கூறும்போது, “கோவை மாவட்டத்தில் போதைப் பொருட்களின் விற்பனையை தடுக்கும் பொருட்டு கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் தற்போது வரை நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 74 நபர்கள் மீது 55 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர்களிடமிருந்து சுமார் 56.58 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்டம் ஒழுங்குக்கு எதிராக செயல் பட்டாலோ சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.