

நொய்டா: கிரேட்டர் நொய்டாவில் தங்கியிருந்து போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த நைஜீரியாவைச் சேர்ந்த 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் நேற்று கூறியதாவது:
நைஜீரியா நாட்டைச் சேர்ந்தவர்கள் கிரேட்டர் நொய்டா பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து ஆய்வகம் அமைத்து மெத்திலினெடி ஆக்சிபெனேதிலமைன் (எம்டிஎம்ஏ) என்ற போதைப் பொருளை தயாரித்து சுற்றுவட்டாரப் பகுதிகளில் விற்பனை செய்து வந்துள்ளனர்.
போதை மருந்து உலகில் எக்ஸ்டஸி அல்லது மோலி என்று பிரபலமாக அறியப்படுகிற எம்டிஎம்ஏ போதைப் பொருளை அவர்கள் ரூ.100 கோடிக்கும் மேல் இதுவரையில் விற்றுள்ளதுவிசாரணையில் தெரியவந்துள்ளது. அத்துடன், அவர்களிடமிருந்து மேலும், ரூ.100 கோடிமதிப்புள்ள போதைப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
போதைமருந்து விற்பனையில் ஈடுபட்ட அந்த 4 நைஜீரியர்களும் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டனர். போதைமருந்து கடத்தல் கும்பலுடன் அவர்களுக்குள்ள தொடர்பு குறித்து தீவிரமாக விசாரித்து வருகிறோம். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.