Published : 19 Apr 2024 06:10 AM
Last Updated : 19 Apr 2024 06:10 AM

தனது புகைப்படத்தை வாட்ஸ்-அப்பில் டி.பி.யாக வைத்து சக அதிகாரிகளிடம் பணம் கேட்கும் கும்பல்: ஐஏஎஸ் அதிகாரி போலீஸில் புகார்

சென்னை: தனது புகைப்படத்தை வாட்ஸ்அப்பில் டிபியாக வைத்து சக அதிகாரிகளிடம் பணம் கேட்பதாக போக்குவரத்து ஆணையர் சண்முக சுந்தரம் காவல் ஆணையரிடம் புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சைபர் க்ரைம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற உயர் அதிகாரிகளை குறிவைத்து பல்வேறு சமூக ஊடக தளங்களில் போலி ஐடிகளை உருவாக்கி அவர்களின் உறவினர்கள் மற்றும் சக ஊழியர்களை அணுகி அவர்களிடம், தற்போது அவசரமாக பணம் தேவைப்படுகிறது. பணத்தை கொடுத்தால் அடுத்த சில மணி நேரங்களில் திரும்ப கொடுத்து விடுவேன் என கும்பல் ஒன்று பணம் பெற்று மோசடி செய்து வந்தது.

இது தொடர்பாக விசாரணையில் இறங்கிய சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் க்ரைம் போலீஸார் இக்குற்றச் செயல்களில் ஈடுபட்ட நபர்களை அடுத்தடுத்து கைது செய்து சிறையிலடைத்தனர். இருப்பினும், இதுபோன்ற மோசடிகள் ஆங்காங்கே நடந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் தமிழக அரசு போக்குவரத்து துறை ஆணையர் சண்முக சுந்தரத்தின் புகைப்படத்தை வாட்ஸ்அப்பில் டி.பி.யாக வைத்து சக அதிகாரிகளிடம் பணம் கேட்டு அழைப்பு வருவதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரியான தமிழக அரசு போக்குவரத்து துறை ஆணையர் மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் சண்முக சுந்தரம் தனது அலுவலக தனி உதவியாளர் அருண்குமார் மூலம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:

வாட்ஸ்-அப், சினாப்சாட்களில் எனது புகைப்படத்தை டி.பி.யாக வைத்து தன் சக பணியாளர்களிடம் பணம் கேட்டு சிலர் தகவல் அனுப்பி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் தெரிவித்திருந்தார். இதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் தலைமையிலான சைபர் க்ரைம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x