சென்னை | ரூ.12.32 கோடி தங்க நாணய மோசடி வழக்கு: கும்பகோணம் தொழிலதிபர் கைது

சென்னை | ரூ.12.32 கோடி தங்க நாணய மோசடி வழக்கு: கும்பகோணம் தொழிலதிபர் கைது
Updated on
1 min read

சென்னை: தி.நகர் வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள பிரபல நகைக்கடையின் மேலாளர் சந்தோஷ் குமார், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அண்மையில் புகார் ஒன்று அளித்தார். அதில், ‘நகை வியாபாரிகளான கும்பகோணம் ஸ்ரீநகர் காலனி தீத்தர் தோட்டம் 2-வது தெருவைச் சேர்ந்த சகோதரர்கள் கணேஷ், சுவாமி நாதன் ஆகியோர் கடந்த 2020 ஜூலை முதல் 2023 டிசம்பர் 31-ம் தேதி வரை 38.6 கிலோ தங்க நாணயங்களை எங்களிடம் வாங்கினர். இதில் 9.475 கிலோவுக்கு மட்டும் பணம் கொடுத்துள்ளனர்.

மீதம் உள்ள ரூ.12.32 கோடி மதிப்புள்ள 28.531 கிலோ கிராம் தங்க நாணயத்துக்கு பணம் கொடுக்கவில்லை. பல முறை நாங்கள் பணத்தைக் கேட்டு, பலன் இல்லை. எனவே, நகை மோசடியில் ஈடுபட்ட இருவர் மீதும் நடவடிக்கை எடுத்து தங்க நாணயங்கள் அல்லதுஅதற்கான பணத்தை பெற்றுத் தரவேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இது குறித்து உரிய விசாரணை நடத்த சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் மத்தியக் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு, செய்து விசாரணை செய்தனர். இந்நிலையில் சுவாமிநாதனை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

கணேஷை பிடித்து போலீஸார் விசாரணை செய்கின்றனர். அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதால், அவரை கைது செய்து சிறையில் அடைப்பது குறித்து ஆலோசித்து வருகின்றனர். இந்த சகோதரர்கள் மீது ஏற்கெனவே பல்வேறுகுற்ற வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in