

சென்னை: மருத்துவ சிகிச்சைக்காக சென்னை வந்த மேற்கு வங்க தம்பதியிடம், ஆசீர்வாதம் செய்வதாகக் கூறி வழிப்பறி செய்த நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
இதுகுறித்து ஆயிரம் விளக்கு போலீஸார் தரப்பில் கூறப்படுவதாவது: மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் முகமது இம்தியாஸ்(30). இவர் தனது குழந்தைக்கு சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெறுவதற்காக, ஆயிரம் விளக்கு ராமசாமி தெருவில் உள்ள லாட்ஜ் ஒன்றில் மனைவி, குழந்தையுடன் தங்கி இருந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து தனது மனைவி, குழந்தையுடன் அவர்தங்கிருந்த லாட்ஜுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, மருத்துவமனை அருகே இம்தியாஸை வழிமறித்த ஒருவர் ஆசீர்வாதம் செய்வதாகக் கூறினார். அவருக்கு காசு கொடுக்க, மணிபர்சை எடுத்தபோது அதை பிடுங்கிக் கொண்டு அந்த நபர் ஓடிவிட்டார்.
அதிர்ச்சி அடைந்த இம்தியாஸ், இதுகுறித்து ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்தனர். முதல்கட்டமாக சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளைக் கைப்பற்றி அதன் அடிப்படையில் விசாரித்து வருகின்றனர்.