

சென்னை: காஞ்சிபுரத்தில் 22 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் கைதான ஆந்திர இளைஞருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து, சென்னை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2022 டிச. 3-ம் தேதி காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையம் அருகே ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வரப்படுவதாக போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீஸார் 22 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரியை சேர்ந்த வெங்கட கிருஷ்ணா(28) என்பவரை கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை சென்னை போதைப்பொருள் தடுப்பு வழக்குகளுக்கான இரண்டாவது கூடுதல் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜெ. ஜூலியட் புஷ்பா முன்பாக நடந்தது. போலீஸார் தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் என்.நந்தகோபால் ஆஜராகி வாதிட்டார். அதையடுத்து நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட வெங்கட கிருஷ்ணாவுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.