Published : 16 Apr 2024 05:50 AM
Last Updated : 16 Apr 2024 05:50 AM
சென்னை: சென்னையில் உள்ள பிரபல நகைக்கடையில் ரூ.12 கோடியே 32 லட்சம் மதிப்புள்ள தங்க நாணயங்களைப் பெற்று அதற்கான பணத்தை கொடுக்காமல் மோசடியில் ஈடுபட்டதாக இருவர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை தி.நகர் வடக்கு உஸ்மான் சாலையில் பிரபலமான நகைக்கடை ஒன்று செயல்படுகிறது. இந்த நகைக்கடையின் மேலாளர் சந்தோஷ் குமார் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அண்மையில் புகார் ஒன்று அளித்தார். அதில், ``நகை வியாபாரிகளான கும்பகோணத்தைச் சேர்ந்த சகோதரர்கள் கணேஷ், சுவாமிநாதன் ஆகியோர் கடந்த 2020 ஜூலை முதல் 2023 டிசம்பர் 31-ம்தேதி வரை 38.6 கிலோ தங்க நாணயங்களை, வியாபாரம் செய்யவாங்கிக் கொண்டு 9.475 கிலோவுக்கு மட்டும் பணம் கொடுத்துள்ளனர்.
மீதம் உள்ள தங்க நாணயத்துக்குப் பணம் கொடுக்கவில்லை. இதுகுறித்து கேட்டும் பலன் இல்லை. எனவே, நகை மோசடியில் ஈடுபட்ட இருவர் மீதும் நடவடிக்கை எடுத்து எங்களது தங்க நாணயங்களை திரும்ப பெற்றுத் தர வேண்டும். அல்லது அதற்கான பணத்தை பெற்றுத் தர வேண்டும்'' எனப் புகாரில் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மோசடி செய்யப்பட்ட தங்க நாணயங்களின் மொத்த மதிப்பு சுமார் ரூ.12 கோடியே 32 லட்சம் வரை இருக்கும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து தொடர்ந்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT