

வாஷிங்டன்: மனைவியை கொலை செய்த இந்தியர் குறித்து தகவல் அளித்தால் ரூ.2.1 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும் என்று அமெரிக்காவின் எப்பிஐபோலீஸார் அறிவித்துள்ளனர்.
இந்தியாவின் குஜராத் மாநிலம் விராம்கம் பகுதியை சேர்ந்தவர் பத்ரேஷ்குமார் சேத்தன்பாய் படேல். அவரும்அவரது மனைவி பாலக்கும் அமெரிக்காவின் மேரிலேண்ட் நகரில் உள்ள உணவகத்தில் பணியாற்றி வந்தனர். கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் 12-ம் தேதி உணவகத்தில் பணியாற்றியபோது மனைவி பாலக்கை, பத்ரேஷ்குமார் கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டார்.
இதுகுறித்து மேரிலேண்ட் போலீஸார் விசாரணை நடத்தினர். பின்னர் இந்த வழக்கு எப்பிஐ போலீஸாருக்கு மாற்றப்பட்டது. கடந்த 8 ஆண்டுகளாக பத்ரேஷ்குமாரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். ஆனால் அவர் இதுவரை பிடிபடவில்லை.
இந்த சூழலில், எப்பிஐ போலீஸாரின் முதல் 10 குற்றவாளிகளின் பட்டியலில் பத்ரேஷ்குமார் சேர்க்கப்பட்டு உள்ளார். அவர் குறித்து தகவல் கொடுப்போருக்குரூ.2.1 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து எப்பிஐ வட்டாரங்கள் கூறியதாவது: மனைவியை கொலை செய்தபோது பத்ரேஷ் குமாருக்கு 24 வயது. அவர் மேரிலேண்டில் இருந்து தப்பி அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களுக்கு இடம்பெயர்ந்து உள்ளார்.
அவர் இந்தியாவுக்கு தப்பிச் சென்றிருக்கக்கூடும் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் முன்னிலையில் மனைவியை பத்ரேஷ்குமார் கொலை செய்திருக்கிறார். இது கொடூரமான கொலை ஆகும். அவரை கைது செய்து நீதியின் முன்பு நிறுத்தும்வரை ஓயமாட்டோம்.
இதன் காரணமாக முதல் 10 குற்றவாளிகளின் பட்டியலில் அவரை சேர்த்துள்ளோம். பரிசுத் தொகையையும் கணிசமாக அதிகரித்திருக்கிறோம். இவ்வாறு எப்பிஐ போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.