

கோவை: உத்தரப்பிரதேச மாநிலம் சுல்தான்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ரிங்கு ( 20 ). இவர், கோவையில் தங்கி டைல்ஸ் ஒட்டும் தொழில் செய்து வந்தார். இவர், ராம் நகர் ராமச்சந்திரா காலனி லே அவுட் பகுதியில் கட்டுமானப் பணி நடைபெற்று வரும் ஒரு வீட்டின் முன்பு, கடந்த 6-ம் தேதி இரவு தூங்கிக் கொண்டிருந்தார்.
மறுநாள் காலை சக ஊழியர்கள் பார்த்தபோது, ரிங்கு ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். அவரது செல்போன் மாயமாகியிருந்தது. காட்டூர் சரக காவல் உதவி ஆணையர் கணேஷ் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, விசாரிக்கப்பட்டது. மதுரை தத்தனேரியைச் சேர்ந்த பால முருகன் ( 19 ), மதுரை அஞ்சல் நகரைச் சேர்ந்த ஈஸ்வரன் ( 19 ) ஆகியோருக்கு இவ்வழக்கில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸார் கைது செய்து, ரிங்குவின் செல்போனை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், பால முருகன், கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியிலும், ஈஸ்வரன் மதுரையில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியிலும் படித்து வருவது தெரியவந்தது. சம்பவத்தன்று இவர்கள் உட்பட 3 பேர், கத்தியால் ரிங்குவை குத்தி விட்டு, அவரிடம் இருந்த செல்போனை பறித்துச் சென்றது தெரியவந்தது. இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் ஒருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.