

தென்காசி: தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே காவல் துறையின் ஜீப் மோதியதில் திமுக பிரமுகர் உயிரிழந்தார். இந்நிலையில், உயிரிழந்தவரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் அருகே உள்ள கலிங்கப்பட்டியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (42). திமுக இளைஞரணி ஒன்றிய அமைப்பாளர். இவர் நேற்று சுரண்டை சேர்ந்தமரம் பகுதியில் உள்ள தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி அருகே, சாலையைக் கடந்து செல்ல முயன்றார். அப்போது, சேர்ந்தமரம் நோக்கிச் சென்ற போலீஸ் ஜீப் சுப்பிரமணியன் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்தசுப்பிரமணியன், சுரண்டையில்உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். எனினும்,அவர் சிகிச்சை பலனின்றி உயிர்இழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த சுப்பிரமணியனின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள், சுரண்டை பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து, அங்கு சென்ற போலீஸார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீஸார் உறுதியளித்த பின்னர், சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.