

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே பாஜக பிரமுகர் கொலை வழக்கு தொடர்பாக காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ரவுடி உயிரிழந்தார்.
இது தொடர்பாக, போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: திருவள்ளூர் மாவட்டம், நசரத்பேட்டை அருகே பாஜக பிரமுகர் சங்கர் என்பவர் கொல்லப் பட்ட வழக்கில் தொடர்புடைய 5 பேர் புட்லூர் அருகே தலைமறைவாக இருப்பதாக தனிப்படை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, தனிப்படை போலீஸார் அங்கு சென்று பதுங்கி இருந்த 5 பேரை பிடித்து விசாரணைக்காக செவ்வாப் பேட்டை காவல் நிலையத்துக்கு நேற்று அழைத்துச் சென்றனர்.
இந்நிலையில், சங்கர் கொலை வழக்கில் முதல் குற்றவாளியான ஸ்ரீபெரும்புதூரை அடுத்த கச்சிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ரவுடி சாந்தகுமாருக்கு விசாரணையின் போது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவரை போலீஸார் திருவள்ளூர் அரசு மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அவர் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதற்கிடையே, ரவுடி சாந்தகுமார் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.