Published : 13 Apr 2024 06:16 AM
Last Updated : 13 Apr 2024 06:16 AM
சென்னை: சென்னையில் போதைப் பொருட்கள் கடத்துதல், விற்பனை செய்தல் மற்றும் பதுக்கலை தடுக்க போலீஸார் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையிலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படை போலீஸார் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் இருந்து சென்னைக்கு ரயிலில் போதை மாத்திரைகள் கடத்தி வரப்படுவதாக திருவொற்றியூர் காவல் நிலைய தனிப்படை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்அடிப்படையில், தனிப்படை போலீஸார் அம்பத்தூர் ரயில் நிலையத்தில் கண்காணித்தனர்.
அப்போது செகந்திராபாத்தில் இருந்து வந்த பயணிகள் 3 பேரை பின் தொடர்ந்து சென்றனர். அவர்கள் திருவொற்றியூர் ரயில் நிலையத்தில் இறங்கி அஜாக்ஸ் பேருந்து நிலையம் சென்று பேருந்தில் ஏற முயன்றனர்.
அப்போது தனிப்படை போலீஸார், அந்த 3 பேரையும் சுற்றிவளைத்து சோதனை நடத்தினர். அவர்களது பையில் மறைத்து வைத்திருந்த போதைப் பொருளாக பயன்படுத்தும் 3,030 வலி நிவாரண மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.
பின்னர், 3 பேரையும் திருவொற்றியூர் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அவர்கள் அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் நரேஷ்பாபு (24), லாசர் (22), ஜெகதீஷ் (23) என்பது தெரியவந்தது.
ரயில் மூலம் தெலங்கானா மாநிலம் சென்று வலி நிவாரண மாத்திரைகளை மருத்துவமனைகளுக்கு வாங்குவதுபோல் போலியான ஆவணங்களை காண்பித்து வாங்கி வந்து ரூ.3 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரை சென்னையில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரும் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT