

சென்னை: பொது சொத்தை சேதப்படுத்திய வழக்கில் 11 பேருக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறைத் தண்டனையை உறுதி செய்து சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோயில் மற்றும் டாக்டர் அழகப்பா சாலை சந்திப்பில் கடந்த 2012 ஜூன் 18 அன்று கல்லூரி மாணவர்கள் சிலர் கற்கள் மற்றும் உருட்டுக் கட்டைகளுடன் திரண்டு அப்பகுதி வழியாகச் சென்ற அரசு பேருந்துகள், கார் கண்ணாடிகள் மீது தாக்குதல் நடத்தினர்.
இந்த சம்பவம் தொடர்பாக வேப்பேரி போலீஸார் புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த கார்த்திக், யானைகவுனியைச் சேர்ந்த சரத்குமார் உட்பட 15 பேர் மீது பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல், பொது அமைதிக்குப் பங்கம் ஏற்படுத்துதல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த எழும்பூர் பெருநகர தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட 15 பேருக்கும் தலா ஓராண்டுசிறைத் தண்டனை மற்றும் ரூ.18 ஆயிரத்து 790 அபராதம் விதித்து கடந்த 2020 மார்ச் 9 அன்று தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து அல்லிக்குளத்தில் உள்ள 23-வது மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி ராஜ்குமார் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மாநகர கூடுதல்குற்றவியல் வழக்கறிஞர் பி.செந்தில்ஆஜராகி, இந்த வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டவர்களில் 4 பேர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகவும், எஞ்சிய 11 பேருக்கும் விதிக்கப்பட்ட தண்டனையை உறுதிசெய்ய வேண்டும் எனவும் கூறினார்.
அதையடுத்து நீதிபதி, ``குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பில் தலையிட எந்த முகாந்திரமும் இல்லை. இந்தசம்பவம் நடந்து பல ஆண்டுகளாகிவிட்டன. குற்றத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தற்போது குடும்பம் சகிதமாக வாழ்ந்து வருவதால் அவர்களை விடுவிக்க வேண்டும் என்றவாதத்தை ஏற்க முடியாது. இந்தவழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள் சாலையில் ஒன்று கூடி பொது போக்குவரத்துக்கும், பொது சொத்துக்கும் சேதம் விளைவித்துள்ளனர்.
குறிப்பாக பொதுமக்கள் மத்தியில் ஒருவித அச்ச உணர்வை ஏற்படுத்தி அதன்மூலம் பொது அமைதியைச் சீர்குலைத்துள்ளனர். எனவே இவர்களுக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறைத் தண்டனை உறுதி செய்யப்படுகிறது'' எனத் தீர்ப்பளித்து மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்துள்ளார்.