Published : 04 Apr 2024 06:10 AM
Last Updated : 04 Apr 2024 06:10 AM

மயிலாப்பூரில் இருசக்கர வாகனத்தில் சென்றவரிடம் 6 பேர் கும்பல் கத்தியை காட்டி மிரட்டி ரூ.1.50 கோடி வழிப்பறி?

சென்னை: மயிலாப்பூரில் கத்தி முனையில் ரூ.1.50 கோடி பறிக்கப்பட்டதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு தமிழகத்தில் வரும் 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இது ஒருபுறம் இருக்க அரசியல் கட்சியினர் பணம் மற்றும் பரிசு பொருட்களை கொடுத்து வாக்குகளை கவர்ந்து விடக்கூடாது என்பதற்காக பறக்கும் படையினர் 24 மணிநேரமும் தீவிர கண்காணிப்பு மற்றும்வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

ரூ.50 ஆயிரத்துக்கு மேல்உரிய ஆவணங்களின்றி கொண்டுசெல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு, வருமான வரித்துறையிடம்ஒப்படைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு காவல் கட்டுப்பாட்டு அறையை ஒருவர் தொடர்பு கொண்டு, `‘மயிலாப்பூர் சாய்பாபா கோயில் அருகே இருசக்கர வாகனத்தில் ரூ.1.50 கோடி பணத்துடன் சென்றேன்.

அப்போது, இருசக்கர வாகனங்களில் பின் தொடர்ந்து வந்த 6 பேர் கும்பல் என்னை வழிமறித்து கத்தி முனையில் மிரட்டி என்னிடமிருந்த பணத்தை பறித்து தப்பினர்’' என பதற்றத்துடன் கூறினார். இதையடுத்து, மயிலாப்பூர் காவல் நிலைய போலீஸார் சம்பவ இடம் விரைந்து சம்பந்தப்பட்ட நபரிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது, காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டவர் வினோத் குமார் என்பதும், தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் மேலாளராக பணிபுரிவதும், இந்த கல்லூரி நிர்வாகி கோட்டூர்புரத்தில் வசிப்பதும், கல்லூரி பணம் ரூ.1.50 கோடியை கோட்டூர்புரம் எடுத்துச் சென்றபோது வழிப்பறி நடைபெற்றதாகவும் கூறினார்.

இதை காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வமாக புகாராக தெரிவிக்கும்படி போலீஸார் அறிவுறுத்தினர். ஆனால், அந்த நபரோ எங்கள் கல்லூரி நிர்வாகிகளிடம் ஆலோசித்து பின்னர் புகார் அளிக்கிறேன் என கூறி சென்றவர், மீண்டும் காவல் நிலையம் வந்து ரூ.2 லட்சம் மட்டுமே வழிப்பறி செய்யப்பட்டதாக கூறினார். ஆனால், எழுத்துப்பூர்வமாக புகார் ஏதும் அளிக்கவில்லை.

இதனால், போலீஸாருக்கு குழப்பம் ஏற்பட்டது. உண்மையிலேயே ரூ.1.50 கோடி வழிப்பறி செய்யப்பட்டதா? அரசியல் கட்சியினருக்காக எடுத்துச் செல்லப்பட்ட பணம் என்பதால் உண்மையை மறைக்கின்றனரா? அல்லது வழிப்பறி என்பதுநாடகமா? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சிசிடிவி கேமரா காட்சிகள் அடிப்படையிலும் துப்பு துலக்கப்பட்டு வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x