

சென்னை: வீடு புகுந்து மிரட்டியதாக நடிகை சரண்யா மீது பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தமிழ் சினிமாவில் பிரபல குணச்சித்திர நடிகையாக உள்ளவர் சரண்யா பொன்வண்ணன். இவர் `நாயகன்',`எம்டன் மகன்', `வேலையில்லா பட்டதாரி', `ஒரு கல் ஒரு கண்ணாடி' உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார். இவர், விருகம்பாக்கம் பத்மாவதி நகரில்உள்ள வீட்டில் குடும்பத்துடன் வசிக்கிறார்.
இவரது பக்கத்து வீட்டில் ஸ்ரீதேவி (43) என்பவர் வசிக்கிறார். இவர், நேற்று முன்தினம் மதியம் மருத்துவமனைக்கு செல்ல, காரை எடுக்க வீட்டு கேட்டை திறந்துள்ளார். அப்போது, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த நடிகை சரண்யாவின் கார் மீது உரசியதாக கூறப்படுகிறது.
இதனால், கோபமடைந்த நடிகை சரண்யா, ஸ்ரீதேவி வீட்டுக்குச் சென்று தகாதவார்த்தையில் பேசி மிரட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ஸ்ரீதேவி விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த விவகாரம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.