

சென்னை: மது போதையில் தகராறு செய்த இங்கிலாந்து கடற்படை அதிகாரியால் ராயப்பேட்டையில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீஸ் தரப்பில்கூறப்படுவதாவது: சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனை அருகே நேற்று முன்தினம் இரவு 8.45 மணியளவில் இளைஞர் ஒருவர் அந்த வழியாகச் சென்றவர்களிடம் தகராறில் ஈடுபட்டார். அவர் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட இளைஞரின் கைகளைக் கட்டி ஆட்டோவில் ஏற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்ப முயன்றனர். தகவல் அறிந்து ரோந்து போலீஸார் அங்கு விரைந்தனர். அவர்களிடம் மேலும், சில இளைஞர்கள் சென்று, தாங்கள் இங்கிலாந்து கடற்படை அதிகாரிகள், எண்ணூர் காட்டுப்பள்ளி துறைமுகத்தில் தங்கி பணிபுரிந்து வருகிறோம். ராயப்பேட்டை மணிக்கூண்டு அருகே உள்ள வணிக வளாகத்தை சுற்றிப் பார்க்க 25 பேர் பேருந்தில் வந்தோம்.
அப்போது, எங்களுடன் பணி செய்யும் இளைஞர் தகராறு செய்வதாகக் கூறி பொதுமக்கள் பிடித்து வைத்துள்ளனர். அவர்களிட மிருந்து சக பணியாளரை மீட்டுத் தர வேண்டும் எனத் தெரிவித்தனர். இதையடுத்து சம்பந்தப்பட்டவர் மீட்கப்பட்டு இங்கிலாந்து கடற்படை அதிகாரிகளிடம் ஒப்படைக் கப்பட்டார்.