

சென்னை: சென்னையில் போதைப் பொருட்கள் விற்பனை செய்த 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை எம்.ஜி.ஆர் நகர் அண்ணா மெயின் ரோடு அஜந்தா பேருந்து நிறுத்தம் அருகே நேற்று முன்தினம் போலீஸார் ரோந்து பணியில் இருந்தபோது, சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த 2 இளைஞர்களை பிடித்து விசாரித்தனர்.
மேலும், அவர்களை சோதனை செய்தபோது, அவர்களிடம் உடல் வலி நிவாரண மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து விசாரணை நடத்தியதில், அவர்கள் கே.கே.நகரை சேர்ந்தஜானேஷ்வரன்(22), விருகம்பாக்கத்தை சேர்ந்த கார்த்திக்(29) என்பது தெரிந்தது. அவர்களைகைது செய்த போலீஸார், அவர்களிடம் இருந்து 25 மாத்திரைகள், 2 ஊசிகளை பறிமுதல் செய்தனர்.
போலீஸார் ரோந்து பணியில்.. இதேபோல், பெரியமேடு மூர் மார்க்கெட் அருகே மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸார் கண்காணிப்பு பணியில் இருந்தபோது, கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஓடிசா மாநிலத்தை சேர்ந்த துகுனா மாலிக் (44) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும், வால்டாக்ஸ் சாலையில் யானைக் கவுனி போலீஸார் ரோந்து பணி யில் இருந்தபோது, கஞ்சா வைத்திருந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த கைலாஷ் பிரதான் (33) என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்து 4.2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இளைஞர் தப்பியோட்டம்: இதேபோல், சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் பூக்கடை போலீஸார் கண்காணிப்பு பணியில் இருந்தபோது, அங்கு சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த இளைஞரிடம் விசாரிக்க சென்றனர். அப்போது, அந்த இளைஞர் தனது பையை கீழே போட்டுவிட்டு தப்பி ஓடினார். அந்த பையை சோதனை செய்தபோது, அதில் 5.3 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து தப்பி ஓடிய அந்த இளைஞரை போலீஸார் தேடி வருகின்றனர்.
சென்னையில் கஞ்சா, போதைப் பொருட்கள் வைத்திருந்த 4 பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்து 14.55 கிலோ கஞ்சா, 25 மாத்திரைகள், ஊசிகளை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.