

தாம்பரம்: சென்னை, இரும்புலியூரை சேர்ந்த நபரிடம் சிபிஐ அதிகாரிகள் போல் தொலைபேசியில் பேசி ரூ.50 லட்சம் பணமோசடியில் ஈடுபட்டதாக கேரள மாநிலத்தை சேர்ந்த 4 பேரை கைது செய்த தனிப்படை போலீஸார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சென்னை, இரும்புலியூர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(52). இவருடைய செல்போனுக்கு 44720754022 என்ற தொலைபேசி எண்ணில் இருந்து அழைப்பு வந்துள்ளது. அதிலிருந்து சிபிஐ அதிகாரி போல் பேசிய நபர், ‘உங்கள் தொலைபேசி எண்ணிலிருந்து பெண்களை கொடுமைப்படுத்தும் விதமாக குறுஞ்செய்திகள் மற்றும் விளம்பரங்கள் அனுப்பப்பட்டுள்ளன.
இந்த குற்றத்துக்காக மும்பை போலீஸார் உங்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கை ஸ்கைப் செயலி மூலம் விசாரணை செய்ய வேண்டும். மேலும் உங்கள் மீது பணமோசடி வழக்கும் உள்ளது. பணமோசடியில் சிக்கிய 4 பேருடன் உங்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக தீவிர விசாரணை செய்ய வேண்டியுள்ளது. இந்த விசாரணைக்கு உங்கள் வங்கி கணக்கிலிருந்து நான் சொல்லும் வங்கி கணக்குக்கு ரூ.50 லட்சம் அனுப்பவும். உங்கள் மீது ஏதும் குறைபாடு இல்லை என்றால், இந்தப் பணம் திருப்பி அனுப்பப்படும்’ என்று கூறி தன் வங்கிக் கணக்கு எண்ணைத் தெரிவித்துள்ளார்.
இதை நம்பி தொலைபேசியில் தொடர்புகொண்ட நபர் தெரிவித்த வங்கி கணக்குக்கு சுரேஷ்குமார் பணத்தை அனுப்பியுள்ளார். ஆனால், பேசியபடி அவர்கள் பணத்தை மீண்டும் தன் வங்கிக் கணக்குக்கு அனுப்பாததால் தான் ஏமாற்றப்பட்டிருப்பதை சுரேஷ்குமார் அறிந்து கொண்டார்.
இதையடுத்து, தாம்பரம் மாநகர காவல் ஆணையரிடம் மேற்கண்ட சம்பவம் தொடர்பாக புகார் அளித்துள்ளார். இதன்பேரில், தாம்பரம் மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதில், சுரேஷ்குமாரிடம் மோசடியாக பறிக்கப்பட்ட பணம் கேரளா மாநிலத்தை சேர்ந்த அப்ரீட்(25), வினிஸ்(35) ஆகியோரின் வங்கி கணக்கில் பெறப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. மேலும் சிபிஐ அதிகாரிகள் போல் நடித்து ஏமாற்றிருப்பதும் தெரிந்தது. இதையடுத்து, தனிப்படை அமைத்து கேரள மாநிலம் சென்று போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர், இச்சம்பவத்தில் தொடர்புடைய அதே மாநிலத்தை சேர்ந்த முனீர்(34), பாசலு ரகுமான்(29) ஆகியோர் உட்பட 4 பேரை ஆள்மாறாட்டம் செய்து பண மோசடியில் ஈடுபட்டதாக கைது செய்து தாம்பரம் அழைத்து வந்தனர். அவர்களிடமிருந்து 4 செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர், தாம்பரம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும், சிபிஐ அதிகாரிகள் போல் ஆள்மாறாட்ட மோசடி, பகுதி நேர வேலை மோசடி அல்லது டெலிகிராம் டாஸ்க் கேம் தொடர்பான முதலீடுகள் குறித்து, பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும். ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின், சைபர் எல்ப் லைன் எண்,1930 அல்லது நேஷனல் சைபர் க்ரைம் ரிப்போட்டிங் போர்டல் www.cybercrime.gov.in என்ற இணையதளத்தின் மூலம் புகார் அளிக்கலாம் அல்லது சைபர் க்ரைம் காவல் நிலையத்தை பொதுமக்கள் அணுகலாம் என்றும் தாம்பரம் மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.