Published : 30 Mar 2024 06:30 AM
Last Updated : 30 Mar 2024 06:30 AM
சென்னை: மாதவரத்தைச் சேர்ந்தவர் பழனி.இவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், ``மாதவரத்தைச் சேர்ந்த பெண் தோழி ஒருவர் மூலம் அதே பகுதியைச் சேர்ந்த ரேணுகா, அவரது மகள்சியாமலீஸ்வரி மற்றும் சண்முகம் (37) ஆகியோர் எனக்கு அறிமுகமாகினர். அவர்கள் தங்களுக்கு மத்திய, மாநில அரசுத் துறைகளில் உயர் அதிகாரிகளைத் தெரியும் எனவும், தங்களால் அரசு வேலை வாங்கி கொடுக்க முடியும் எனவும் ஆசை வார்த்தை கூறினர்.
எனக்கு பாரத ஸ்டேட் வங்கியில் வேலை வாங்கி தருவதாக உறுதி அளித்தனர். இதை உண்மைஎன நம்பி ரூ.3.37 லட்சம் கொடுத்தேன். ஆனால், உறுதியளித்தபடி அவர்கள் வேலை வாங்கி கொடுக்கவில்லை. பெற்ற பணத்தையும் திரும்பக் கொடுக்கவில்லை. எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று தெரிவித்திருந்தார்.
இந்த புகார் குறித்து சென்னை மத்திய குற்றப் பிரிவில் உள்ள வேலை வாய்ப்பு மோசடி புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் சுமதி விசாரணை நடத்தினார். விசாரணையில் புகாருக்குள்ளானவர்கள் மத்திய அரசு நிறுவனங்களான பாஸ்போர்ட் அலுவலகம், குடியுரிமை பாதுகாப்பு அலுவலகம் மற்றும் பல்வேறு அரசு வங்கிகளில் வேலை வாங்கி தருவதாக 55-க்கும் மேற்பட்ட வேலை தேடும்அப்பாவி இளைஞர், இளம் பெண்களைக் குறிவைத்து அவர்களிடமிருந்து ரூ.1.50 கோடிக்கும் மேல்பணம் பெற்றுக் கொண்டு, நட்சத்திர ஓட்டல்களில் அரசு அதிகாரிபோல் செயல்பட்டு போலியாக நேர்காணல் நடத்தி மோசடி செய்து வந்தது தெரியவந்தது.
இவ்வழக்கில் அரசு அதிகாரிபோல் நடித்து மோசடியில் ஈடுபட்டதாக சண்முகத்தை போலீஸார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ளவர்களை தனிப்படை அமைத்து தொடர்ந்து தேடி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT