லஞ்சம் பெற்ற வழக்கில் வனச் சரகர் உட்பட 2 பேருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை

லஞ்சம் பெற்ற வழக்கில் வனச் சரகர் உட்பட 2 பேருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை
Updated on
1 min read

திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை சடையம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வீரப்பன். விவசாயி. இவரதுமாமா முத்து என்பவர், 2005-ல்தனக்குச் சொந்தமான நிலத்தில் இருந்த தேக்குமரத்தை வெட்டினாராம். அவர் மீது வழக்கு பதிவுசெய்து, அபராதம் விதிக்காமல் இருப்பதற்காக, ரூ.3 ஆயிரம் லஞ்சம் கொடுக்குமாறு அப்போதைய மணப்பாறை வனச் சரகர்ஜனகராஜன்(71), வனக் காவலர் ராமலிங்கம்(64) ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத வீரப்பன், தனது மாமா முத்துவிடம் லஞ்சம் கேட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு திருச்சி லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தார்.

போலீஸாரின் ஆலோசனையின்பேரில், வனச் சரகர் ஜனகராஜன், வனக் காவலர் ராமலிங்கம் ஆகியோரிடம் வீரப்பன் ரூ.3 ஆயிரம் வழங்கியபோது, ஜனகராஜன் உள்ளிட்ட இருவரையும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர்.

திருச்சி லஞ்ச ஒழிப்பு வழக்குகள் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட ஜனகராஜன், ராமலிங்கம் ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து சிறப்பு நீதிபதி கார்த்திகேயன் நேற்று தீர்ப்பளித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in