மதுரை சிறுமி நரபலி வழக்கை மறு விசாரணைக்கு உத்தரவிட மறுப்பு

மதுரை சிறுமி நரபலி வழக்கை மறு விசாரணைக்கு உத்தரவிட மறுப்பு
Updated on
1 min read

மதுரை: மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகேயுள்ள புதுதாமரைப் பட்டியைச் சேர்ந்த பி.ரவி, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

மூன்றரை வயதுடைய எனது இரண்டாவது மகள் 8.7.2008-ல் வீட்டுக்கு முன் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென காணாமல்போனார். மறு நாள் ஓடையில் கழுத்து, தலையில் காயத்துடன் மகளின் உடல் கண்டறியப்பட்டது. நகைகள் மாயமாகியிருந்தன. ஒத்தக் கடை போலீஸார் சந்தேக மரணம் என வழக்குப் பதிந்து விசாரித்தனர். எனது மகள் உடல் கிடந்த இடத்தில் பூஜை செய்யப் பட்டதற்கான அடையாளங்கள் இருந்தன. இதனால் குவாரி வளர்ச்சிக்காக மகள் நரபலி கொடுக்கப்பட்டதாக சந்தேகம் எழுந்தது.

2 மாதங்களுக்குப் பிறகு பக்கத்து வீட்டைச் சேர்ந்த ரவி என்பவரை கைது செய்தனர். ஒத்தக்கடை போலீஸ் விசாரணை திருப்தியாக இல்லாததால் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றக்கோரி உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தேன். அந்த மனு நிலுவையில் இருந்த போது 2013-ல் போலீஸார் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில் வாகனம் மோதி என் மகள் உயிரிழந்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில், எனது மகள் மரண வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி 2017-ல் உயர் நீதி மன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கை போலீஸார் சரியாக விசாரிக் கவில்லை. கொலை வழக்கை விபத்து வழக்காக மாற்றியுள்ளனர். உண்மைக் குற்றவாளிகளைத் தப்பிக்க வைக்கும் நோக்கத்தில் போலீஸார் செயல்படுகின்றனர். எனவே, இந்த வழக்கில் போலீஸார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ரத்து செய்து, வழக்கை மீண்டும் விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி தண்டபாணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதி, தற்போது வழக்கு மதுரை மகளிர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. தற்போதைய சூழலில் மறு விசாரணைக்கு உத்தரவிட முடியாது. விசாரணை நீதிமன்றம் உரிய முடிவெடுக்கலாம். மனு முடிக்கப்படுகிறது என உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in