

காஞ்சிபுரம்: வாலாஜாபாத், வெண்குடி கிராமத்தைச் சேர்ந்த பெண் கள்ளச் சாராய வியாபாரி கலையரசி குண்டர் சட்டத்தில் நேற்று கைது செய்யப்பட்டார்.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தை அடுத்த வெண்குடி கிராமத்தில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக காஞ்சிபுரம் சரக மது ஒழிப்பு அமலாக்க பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த ரகசிய தகவலின் அடிப்படையில் காஞ்சிபுரம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸார் வெண்குடி கிராம பகுதிகளில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
இந்தச் சோதனையில் பாலாற்றுபகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 10 கேன்களில் எரிசாராயத்தை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். மேலும் கள்ளச்சாராய பதுக்கி வைத்திருந்த வழக்கில் கள்ளச்சாராய பெண் வியாபாரி கலையரசியை காஞ்சிபுரம் மதுவிலக்கு போலீஸார் கைது செய்தனர்.
இதனைத் தொடர்ந்து கலையரசி மீது வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்ட மதுவிலக்கு போலீஸார், கலையரசியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
ஆட்சியர் உத்தரவு: இந்நிலையில் தொடர்ந்து கள்ளச் சாராய விற்பனையில் ஈடுபட்டு வரும் கலையரசியை, மாவட்ட காவல்துறை கண்காணிப் பாளர் சண்முகம் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் கலைச்செல்விக்கு பரிந்துரை செய்தார். இந்த பரிந்துரையை ஏற்று கலையரசியை ஓராண்டு குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க ஆட்சியர் உத்தரவிட்டார்.