

சென்னை: தொடர் குற்றச் செயல் மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் ஒரு பெண் உட்பட 38 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு, கடத்தல் உட்பட அனைத்து வகையான குற்றச் செயல்களையும் முற்றிலும் கட்டுப்படுத்த காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் கடந்த ஜனவரி 1 முதல் இந்த மாதம் 24-ம் தேதி வரை சென்னை பெருநகரில், கொலை, கொலை முயற்சி மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த குற்றங்களில் ஈடுபட்டதாக 106 பேர், திருட்டு, நகை பறிப்பு, வழிப்பறி மற்றும் பண மோசடி குற்றங்களில் ஈடுபட்டதாக 49 பேர், கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் விற்பனை செய்ததாக 61 பேர், சைபர் குற்றத்தில் ஈடுபட்ட 2 பேர் உட்பட மொத்தம் 245 பேர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 18 முதல் 24-ம் தேதி வரையிலான ஒரு வார காலத்தில் மட்டும் ஒரு பெண் உட்பட 38 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.