கடன் தொல்லையில் இருந்து தப்பிக்க நிலத்தில் கஞ்சா வளர்த்த ஆந்திர விவசாயி கைது

கடன் தொல்லையில் இருந்து தப்பிக்க நிலத்தில் கஞ்சா வளர்த்த ஆந்திர விவசாயி கைது
Updated on
1 min read

விஜயவாடா: ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம், எர்ரகொண்டபாலம் மண்டலத்தில் உள்ள கங்குபல்லே கிராமத்தைச் சேர்ந்தவர் கேஷனபள்ளி பிரம்மய்யா. இவர் தனது 5 ஏக்கர் நிலத்தில் பல் வேறு பயிர்களைப் பயிரிட்டு வந்துள்ளார்.

ஆனால், காலம் தவறிய மழை மற்றும் பல்வேறு காரணங்களால் விவசாயத்தில் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடன் அதிகரித்தது. கடன் கொடுத்தவர்களின் நெருக்கடி அதிகரித்ததால், உடனடியாக பணம் சம்பாதிக்க நினைத்து கஞ்சா விதைகளை வாங்கி வந்தார். வேறு வழியின்றி தனது நிலத்தில் கஞ்சா பயிரிட்டார்.

அது 6 அடி உயரத்துக்கு நன்கு வளர்ந்து விட்டது. அப்போது அந்தப் பகுதி மக்கள் சிலர் சிறப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து விட்டனர். உடனடியாக நிலத்துக்கு வந்த அதிகாரிகள், அங்கு விளைந்திருந்த 282 கஞ்சாசெடிகளை தீயிட்டு அழித்தனர்.

பிரம்மய்யா நிலத்தில் அழிக்கப்பட்ட கஞ்சா செடிகளின் மதிப்பு சுமார் ரூ.3 லட்சம் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் விவசாயி பிரம்மய்யாவை அதிகாரிகள் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கடன் தொல்லையில் கஞ்சா பயிரிட்டு விவசாயி சிறைக்கு சென்றது அப்பகுதி மக்களிடையே பரபரப் பாக பேசப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in