ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவு திரட்டிய விவகாரம்: கைதான 4 பேரை கோவை அழைத்து வந்து என்ஐஏ அதிகாரிகள் விசாரணை

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

கோவை: ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவு திரட்டிய விவகாரம் தொடர்பாக, கைதான 4 பேரை காவலில் எடுத்து, கோவைக்கு அழைத்து வந்து என்ஐஏ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

கோவை உக்கடத்தை அடுத்த கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோயில் அருகே, 2022 அக்டோபர் மாதம் கார் வெடிப்பு சம்பவம் நடந்தது. இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

மேலும், இந்த வழக்கு தொடர்பாக 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், என்ஐஏ அதிகாரிகள் பல்வேறு இடங்களில் சோதனைகளை மேற்கொண்டனர்.

குறிப்பாக, கோவை மாநகரில் இயங்கி வந்த, அரபி மொழியைப் பயிற்றுவிக்கும் கல்லூரியில் நடத்திய சோதனையின்போது, அங்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவான ஆவணங்கள், அந்தஅமைப்புக்கு ஆட்களை மூளைச்சலவை செய்து அனுப்புவதுதொடர்பான ஆவணங்கள் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டன. அதனடிப்படையில், என்ஐஏ சென்னை பிரிவு அதிகாரிகள், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வழக்கு பதிவு செய்தனர்.

மேலும், இது தொடர்பாக கோவையைச் சேர்ந்த இர்ஷாத், முகமது உசேன், ஜமீல் பாட்ஷா உமாி, சையது அப்துல்ரகுமான் உமரி ஆகியோரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். சென்னை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நால்வரும், சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக கூடுதல் தகவல்களைப் பெற, 4 பேரையும் காவலில் எடுத்துவிசாரிக்க அனுமதி கோரி என்ஐஏஅதிகாரிகள் பூந்தமல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். நால்வரையும் 10 நாள் காவலில் விசாரிக்க, கடந்த 18-ம் தேதி நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

இதையடுத்து, இர்ஷாத், முகமது உசேன், ஜமீல் பாட்ஷா உமாி, சையது அப்துல்ரகுமான் உமரி ஆகியோரை காவலில் எடுத்து, பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று என்ஐஏ அதிகாரிகள் விசாரித்தனர். அதன் ஒரு பகுதியாக, நால்வரையும் கோவைக்கு நேற்று முன்தினம் அழைத்து வந்தனர்.

இரு இடங்களில் உள்ள அரபிக் கல்லூரிகள் மற்றும் ஆசாத் நகரில் ஒரு இடத்துக்கு அவர்களை அழைத்துச் சென்று, விசாரணை நடத்தினர். மேலும், அவர்கள் விசாரணையின் போது தெரிவித்த வெவ்வேறு இடங்களுக்கும் அழைத்துச் சென்றனர்.

இதுகுறித்து என்ஐஏ அதிகாரிகள் கூறும்போது, ‘‘நால்வரும் சந்தித்துப் பேசிய இடங்கள், பாடம் நடத்திய அரபிக் கல்லூரிகள், தகவல்களை பரிமாறிக் கொண்ட இடங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு நேரில் அழைத்துச் சென்று, விசாரணை நடத்தப்பட்டது.

எந்த அமைப்பில் அவர்கள் பணிபுரிந்தனர், எவ்வளவு பேரைத் திரட்டி ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைக்க முயற்சித்தனர் போன்ற விவரங்கள் குறித்தும் விசாரிக்கப்படுகிறது’’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in