கோவை நகரில் குற்றங்கள் நிகழும் இடத்தை ‘ஹாட் ஸ்பாட்’ ஆக வகைப்படுத்தி கண்காணிக்க நடவடிக்கை

கோவை நகரில் குற்றங்கள் நிகழும் இடத்தை ‘ஹாட் ஸ்பாட்’ ஆக வகைப்படுத்தி கண்காணிக்க நடவடிக்கை
Updated on
1 min read

கோவை: கோவை மாநகரில் சிங்காநல்லூர், சாயிபாபாகாலனி, காட்டூர் சரகங்களில், குற்றங்கள் அதிகம் நிகழும் பகுதிகள் ‘ஹாட் ஸ்பாட்’ இடங்களாக வகைப்படுத்தி கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என காவல் துணை ஆணையர் ஸ்டாலின் தெரிவித்தார்.

கோவை மாநகர காவல்துறையின், வடக்கு மாவட்டப் பிரிவில் சிங்காநல்லூர், காட்டூர், சாயிபாபா காலனி ஆகிய மூன்று சரகங்களும், சிறப்புப் பிரிவான கட்டுப்பாட்டு அறையும் வருகின்றன. இந்த சரகங்களில் சட்டம் ஒழுங்கு பாதிப்பு மற்றும் குற்றச் சம்பவங்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து சமூக செயல்பாட்டாளர்கள் கூறியதாவது: சிங்கா நல்லூர் சரகம், பீளமேடு காவல் எல்லைக்குட்பட்ட புரானி காலனியில் வசித்து வரும் தொழிலதிபரின் வீட்டில் கடந்த மாதம் ரூ.10 லட்சம், 30 பவுன் நகைகளை மர்மநபர்கள் திருடிச் சென்றனர்.

அதேபோல், பீளமேடு செங்காளியப்பன் நகரில் வசிக்கும் தொழிலதிபரின் வீட்டில் 177 பவுன் நகை திருடுபோனது. தொடர் திருட்டு சம்பவங்களைத் தடுக்க காவல் துறையினர் ரோந்துப் பணியை தீவிரப்படுத்த வேண்டும். தேவையான இடங்களில் புறக்காவல் நிலையங்களை திறக்க வேண்டும்.

வடக்கு காவல் மாவட்டத்தில் முக்கிய கல்லூரிகள் வருகின்றன. மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்டோரிடம் தடை செய்யப் பட்ட புகையிலைப் பொருட்கள், கஞ்சா போன்ற போதைப் பொருட்களின் புழக்கத்தை கட்டுப் படுத்தவும் காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

இதுகுறித்து கோவை மாநகர காவல் வடக்குப்பிரிவு துணை ஆணையர் ஸ்டாலின் கூறியதாவது: காவல் வடக்கு பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் குற்றச் சம்பவங்களைத் தடுக்க பிரத்யேக திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி, குற்றச் சம்பவங்கள் தொடர்ச்சியாக நிகழும் பகுதிகள் ‘ஹாட் ஸ்பாட்’ என வகைப்ப டுத்தப்படும்.

அவை செயற்கைக்கோள் மூலமாக புவியியல் நிலக்குறியீடு எனப்படும் ஜியோ மேப்பிங்கில் வரைய றுக்கப்படும். அங்கு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும். காவல் நிலையங்கள், சரகங்கள் வாரியாக இவை வரையறுக்கப்பட்டு ரோந்துப் பணி முறையாக மேற்கொள்ளப்படுகிறதா? என கண்காணிக்கப்படும்.

வழக்கமாக போலீஸார் சார்பில் இருசக்கர, நான்கு சக்கர வாகன ரோந்துப் பணிகள் மேற்கொள்ளப் படும். தற்போது காவலர்கள் நடந்து சென்று கண்காணிக்கும் முறையும் நடைமுறைப்படுத்தப்படும்.

அதோடு, சட்டம் ஒழுங்கு பாதிப்பு, குற்றங்களைத் தடுக்க கைதாகி பிணையில் வந்த ரவுடிகளின் செயல்பாட்டையும் தனிக்காவலர்கள் மூலம் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in