

படாவுன்: உத்தரபிரதேச மாநிலம் படாவுன் நகரில் வினோத் என்பவர் மனைவி சங்கீதா மற்றும் 3 ஆண் பிள்ளை
களுடன் வசிக்கிறார். இந்நிலையில், இவரது வீட்டுக்கு எதிரில் சஜித் மற்றும் ஜாவேத் ஆகியோர் முடி திருத்தும் கடை (பார்பர் ஷாப்) வைத்துள்ளனர். சகோதரர்களான இவர்கள் வினோத்துக்கு நன்கு தெரிந்தவர்கள்.
இந்நிலையில், சஜித் என்பவர் நேற்று முன்தினம் மாலை வினோத் வீட்டுக்குச் சென்றுள்ளார். வினோத் வீட்டில் இல்லாத நிலையில், தன்னுடைய மனைவியின் பிரசவத்துக்காக ரூ.5,000 கடன் தேவைப்படுவதாக சங்கீதாவிடம் கூறியுள்ளார். இதையடுத்து, சஜித்திடம் பணத்தைக் கொடுத்த சங்கீதா, டீ போடுவதற்காக சமையலறைக்கு சென்றுள்ளார். அப்போது, அங்கிருந்த 11 மற்றும் 6 வயதுடைய 2 சிறுவர்களை மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்று கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார் சஜித். 7 வயதுடைய இன்னொரு சிறுவனையும் தாக்க முயன்ற நிலையில் அவன் சிறு காயத்துடன் தப்பி ஓடிவிட்டான்.
பின்னர் தனது சகோதரன் ஜாவேத் உடன் தப்பிச் சென்றார் சஜித். தகவல் அறிந்து விரைந்து சென்ற போலீஸார் சஜித்தை பிடித்தனர். ஜாவேத் வாகனத்தில் தப்பி விட்டார். அதேநேரம் பிடிபட்ட சஜித் துப்பாக்கியால் சுட்டதையடுத்து, போலீஸார் அவன் மீது பதிலுக்கு துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் சஜித் உயிரிழந்தார். இந்த என்கவுன்ட்டரில் காயமடைந்த காவல் ஆய்வாளர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தப்பி ஓடிய ஜாவேத்தை போலீஸார் தேடி வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சஜித் மற்றும் ஜாவேத்துக்கு சொந்தமான முடி திருத்தும் கடையை தீயிட்டு கொளுத்தினர். இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சஜித்துக்கும் கொல்லப்பட்ட சிறுவர்களின் தந்தை வினோத்துக்கும் இடையே ஏதேனும் பிரச்சினை இருக்குமா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து ஜாவேத், சஜித்தின் தாய் நஜின் கூறும்போது, “என் மகன்கள் காலை 7 மணிக்கு சாப்பிட்டுவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்றனர். அப்போது அவர்கள் நன்றாகத் தான் இருந்தார்கள். பதற்றம் எதுவும் தெரியவில்லை. அதன் பிறகு என்ன நடந்தது என்றே எனக்கு தெரியாது. கொல்லப்பட்ட குழந்தைகளின் குடும்பத்தினருக்காக வருந்துகிறேன். என் மகன்கள் குற்றம் செய்திருந்தால் அதற்கான விளைவுகளை அனுபவித்துதான் ஆக வேண்டும்” என்றார்.
உயிர் தப்பிய 7 வயது சிறுவன் கூறும்போது, “எங்கள் வீட்டுக்கு எதிரில் உள்ள முடி திருத்தும் கடையில் இருந்த வந்த நபர்கள் என்னையும் கொலை செய்ய முயற்சி செய்தார். ஆனால், தப்பி ஓடிவிட்டேன்’’ என்று தெரிவித்தான்.