மத்திய இணை அமைச்சர் ஷோபா மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு @ மதுரை

ஷோபா கரந்தலாஜே | கோப்புப் படம்
ஷோபா கரந்தலாஜே | கோப்புப் படம்
Updated on
1 min read

மதுரை: தமிழர்களுக்கு எதிராக வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலாஜே மீது 4 பிரிவுகளின் கீழ் மதுரை மாநகர சைபர் கிரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கர்நாடகா மாநிலம் மத்திய பெங்களூரு நகரத்தப்பேட்டையில் மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலாஜே செய்தியாளர்களிடம் பேசும்போது, "பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவத்தில், தமிழகத்தை சேர்ந்தவர்களால் வெடிகுண்டு வைக்கப்பட்டது. தமிழகத்தில் இருந்து மக்கள் பயிற்சி பெற்று இங்கு வெடிகுண்டுகளை வைக்கின்றனர்” என நேற்று முன்தினம் அவர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்து கண்டனங்கள் எழுந்தன.

இது தொடர்பாக மதுரை கடச்சனேந்தல் பகுதியைச் சேர்ந்த தியாகராஜன் என்பவர் மதுரை மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். அந்த புகாரில், "செய்தி சேனல் ஒன்றை பார்த்துக் கொண்டிருந்தபோது, மத்திய இணை அமைச்சர் ஷோபாவின் பேச்சு, கர்நாடகா, தமிழ்நாடு மக்களுக்கு இடையே பகை மற்றும் வெறுப்புணர்வுகளை வளர்க்க முயற்சிக்கு வகையில் உள்ளது. தமிழ்நாட்டு மக்களை தீவிரவாதிகள் என, பொதுமைப் படுத்தி தமிழர்கள் மற்றும் கன்னடம் பேசும் மக்கள் என இரு சமூகத்தினரிடையே வெறுப்பை உருவாக்க முயல்கிறது. தமிழ் சமூகத்துக்கு எதிராக வன்முறையை தூண்டும் சாத்தியம் உள்ளது.

மத்திய அமைச்சர் கூறிய கருத்துகள் இரு பிரிவினரிடையே உள்ள நல்ல உறவை நிச்சயமாக கெடுத்து, அவர்களுக்கிடையே பகைமை, வெறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது அறிக்கை வெறுப்பூட்டும் பேச்சாக உள்ளது. தமிழ்நாடு, கர்நாடகா மக்களுக்கு இடையே பகையை வளர்த்து, பெரும் பதட்டத்தை மத்திய அமைச்சர் ஏற்படுத்தியுள்ளார். இது சட்டம், ஒழுங்கு நிலைமையை அச்சுறுத்துகிறது மற்றும் தமிழக மக்களை அச்சத்திற்குள்ளாக்கி உள்ளது. மத்திய இணை அமைச்சர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று புகாரில் குறிப்பிட்டு இருந்தார்.

அதன்பேரில் மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலாஜே மீது 153, 153 (A), 505(1) (b), 505(2) ஆகிய 4 பிரிவுகளின் கீழ் மதுரை சைபர் கிரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தேர்தல் தொடங்கிய நிலையில், ஏற்கனவே தேர்தல் ஆணையம் இரு தரப்பு மோதலை தூண்டும் வகையில் பேசினால் நடவடிக்கை என எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், மத்திய இணை அமைச்சரின் பேச்சு மீது புகார் அளிக்கப்பட்டு மதுரையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் தமிழர்களைத் தொடர்புபடுத்திப் பேசிய மத்திய பாஜக இணையமைச்சர் ஷோபா கரந்த்லாஜே அதற்காக மன்னிப்பு கோரியதோடு தனது கருத்துகளை திரும்பப் பெறுவதாகவும் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in