

சென்னை: அதிக வட்டி ஆசை காட்டி பொதுமக்களிடமிருந்து ரூ.1,620 கோடி வசூலித்து மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த ஹிஜாவு நிறுவன நிர்வாகிகளான கணவன், மனைவி கேரளாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னையை தலைமையிடமாகக் கொண்டு ஹிஜாவு நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனம் தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் அத்தொகைக்கு மாதம் 15 சதவீதம் வட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறியது.
இதை நம்பி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ரூ.1,620 கோடி வரை முதலீடு செய்தனர். ஆனால், இந்நிறுவனம் உறுதி அளித்தபடி வட்டி கொடுக்காமல் ஏமாற்றியது. பாதிப்படைந்த முதலீட்டாளர்கள் இதுகுறித்து சென்னை அசோக்நகரில் உள்ள பொருளாதார குற்றப் பிரிவில் புகார் அளித்தனர்.
அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து ஹிஜாவு நிதி நிறுவனத்தின் தலைவர் சவுந்தரராஜன் உள்பட 20 பேரை அடுத்தடுத்து கைது செய்தனர். இந்த மோசடி வழக்கில் தலைமறைவாக உள்ளவர்கள்
வெளிநாடு தப்பிச் செல்வதைத் தடுக்கும் வகையில் அவர்களுக்கு எதிராக அனைத்து விமான நிலையங்களுக்கம் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், சர்வதேச (இண்டர்போல்) போலீஸாரின் உதவியும் நாடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த மோசடி வழக்கில் கேரளாவில் தலைமறைவாக இருந்த நிர்வாகிகளான வில்லிவாக்கத்தைச் சேர்ந்த பிரீஜா(46), அவரது கணவர் மதுசூதனன்(53) ஆகியோரை காவல் கண்காணிப்பாளர் ஜோஸ் தங்கையா, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் தலைமையிலான போலீஸார் கேரளா சென்று கைது செய்தனர்.
இருவரும் சேர்ந்து 2,500 முதலீட்டாளர்களிடமிருந்து சுமார் ரூ.90 கோடிவரை முதலீடு பெற்றுள்ளனர். இதற்காக சென்னை ஷெனாய் நகரில் ஏபிஎம் அக்ரோ என்ற பெயரில் ஹிஜாவு நிறுவனத்தின் துணை நிறுவனத்தை தொடங்கி பொதுமக்களிடமிருந்து பணம் வசூல் செய்தது தெரியவந்தது.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த இந்த தம்பதியை தனிப்படை போலீஸார் தற்போது கைது செய்துள்ளனர்.