Published : 19 Mar 2024 06:11 AM
Last Updated : 19 Mar 2024 06:11 AM

வண்டலூர் திமுக நிர்வாகி கொலை வழக்கில்: திமுக ஊராட்சி மன்ற தலைவி கைது

முத்தமிழ்செல்வி

வண்டலூர்: வண்டலூர் திமுக நிர்வாகி கொலை வழக்கில் திமுக ஊராட்சி மன்ற தலைவி உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வண்டலூர் ஊராட்சி, வண்டலூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவராகவும், காட்டாங்கொளத்தூர் ஒன்றிய துணை சேர்மனாகவும், காட்டாங்கொளத்துர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலராகவும் இருந்தவர் ஆராமுதன். இவர் கடந்த பிப். 29-ம் தேதி வண்டலூரில் கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். வண்டலூர் - ஓட்டேரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வந்த நிலையில், நீதிமன்றத்தில் சரண் அடைந்தவர்களை கடந்த 11-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் சரணடைந்தவர்கள் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தனர்.

வண்டலூர் ஊராட்சி மன்ற தலைவியாக இருக்கும் முத்தமிழ்செல்வி (50), காட்டாங்கொளத்தூர் ஒன்றிய திமுக மகளிர் அணி அமைப்பாளராகவும், வண்டலூர் ஊராட்சி மன்ற தலைவியாகவும் இருந்து வருகிறார். இவருக்கும், ஆராமுதனுக்கும் அரசியல்ரீதியாக முன் விரோதம் இருந்துள்ளது.

இதன் காரணமாக முத்தமிழ்செல்வி கூலிப்படையை ஏவி ஆராமுதனை கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. அதன் அடிப்படையில் ஓட்டேரி போலீஸார் நேற்று முத்தமிழ் செல்வியை கைது செய்தனர்.

இதேபோல் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது ஒட்டுநரும் ஊராட்சி பம்ப் ஆபரேட்டருமான துரைராஜ் (37) என்பவரையும் கைது செய்து ஓட்டேரி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திமுக நிர்வாகி கொலை வழக்கில், திமுகவை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவி கைது செய்யப்பட்டது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

முத்தமிழ்செல்வியின் கணவர் விஜயராஜ் 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆராமுதன் கொலை செய்யப்பட்ட பாணியிலேயே கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x