

திருச்சி: குஜராத்தில் முகேஷ் அம்பானி இல்லத் திருமண விழாவில் கார் கண்ணாடியை உடைத்து, ரூ.10லட்சம் மதிப்பிலான பொருட்களைத் திருடியதாக திருச்சி ராம்ஜி நகரைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த்அம்பானி- ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமணத்தையொட்டி, குஜராத் மாநிலம் ஜாம்நகரில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்த நிகழ்ச்சிகளுக்கு வந்தவர்களின் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்த பகுதியில் இருந்த ஒரு கார் கண்ணாடியை உடைத்து, மடிக்கணினி உள்ளிட்ட ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்களை சிலர் திருடிச் சென்றுள்ளனர்.
இது தொடர்பாக விசாரணை நடத்திய குஜராத் போலீஸார், திருட்டில் ஈடுபட்டதாக திருச்சி ராம்ஜி நகரைச் சேர்ந்த ஜெகன் பாலசுப்பிரமணியம், தீபக் பார்த்திபன், குணசேகர் உமாநாத், வீரபத்ரன், அகரம் கண்ணன் ஆகிய 5 பேரை டெல்லியில் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், டெல்லி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கார்களின் கண்ணாடியை உடைத்து திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களிடமிருந்து ரூ.10 லட்சம் ரொக்கம், செல்போன்கள், ஹார்ட் டிஸ்க், மடிக்கணினிகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன.
திருட்டு கும்பலின் தலைவனான ராம்ஜி நகர் வி.ஜி.சுகுமாறன் என்ற மதுசூதனனை குஜராத் போலீஸார் தேடி வருகின்றனர். மேலும், இதுகுறித்த தகவல்களை திருச்சி போலீஸாருக்குத் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, திருச்சி போலீஸாரும் குஜராத்தில் திருட்டில் ஈடுபட்டவர்களின் விவரங்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.