

சென்னை: வீட்டில் இருந்த சிலிண்டரை விற்று மது அருந்திவிட்டு, தகராறு செய்த மகனின் கழுத்தை நெரித்து தாயே கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மேற்கு மாம்பலம் பிருந்தாவனம் தெருவில் வசித்து வருபவர் சாந்தி (58). வீட்டு வேலை செய்து வருகிறார்.
இவரது மகன் வெங்கடேசன் (40), கூலி வேலை செய்து வந்தார். கருத்து வேறுபாடு காரணமாக வெங்கடேசனை பிரிந்துஅவரது மனைவி, தனது குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த 15-ம் தேதி காலை தலையில் காயங்களுடன் மர்மமான முறையில் வெங்கடேசன் வீட்டில்இறந்து கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த அசோக்நகர் போலீஸார், வெங்கடேசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
பிரேத பரிசோதனையில் வெங்கடேசன் கழுத்துநெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, சந்தேகத்தின் பேரில் சாந்தியை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது, மகன் வெங்கடேசனை கழுத்தை நெரித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, ‘‘வெங்கடேசன் வீட்டில் இருந்த சிலிண்டரை விற்று மது வாங்கி குடுத்துள்ளார். இதுபற்றி சாந்தி கேட்டபோது இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அதிக மதுபோதையில் இருந்த வெங்கடேசன் தாயை அடிக்க பாய்ந்துள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த சாந்தி, அங்கிருந்த உருட்டுக்கட்டையை எடுத்து மகனை தாக்கியுள்ளார். பின்னர் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, எதுவும் நடக்காதது மாதிரி வழக்கமாக தான் வேலை செய்யும் வீட்டுக்கு சென்றுவிட்டார்’’ என தெரிவித்தனர். இதையடுத்து, சாந்தியை போலீஸார்கைது செய்து சிறையில் அடைத்தனர்.