

சென்னை: சென்னை ரவுடிகளுக்கு துப்பாக்கி சப்ளை செய்த பிஹாரை சேர்ந்த கட்டிட தொழிலாளியை தனிப்படைபோலீஸார் கைது செய்தனர். சென்னை திருமங்கலத்தில் உள்ள ஒரு ஓட்டலில் பிரபல ரவுடிகள் தங்கி இருப்பதாக போலீஸாருக்கு கடந்த 13-ம் தேதி ரகசிய தகவல் கிடைத்தது.
அதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸார் 20 பேரை சுற்றிவளைத்து கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து 4 நாட்டு துப்பாக்கிகள், 82 தோட்டாக்கள், ஒரு ஏர்கன் துப்பாக்கி, 11 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இது குறித்து திருமங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து அனைவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். விசாரணையில் பிஹாரைச் சேர்ந்த இஸ்மாயில் அன்சாரி (35) என்பவரிடம் தூத்துக்குடியை சேர்ந்த ரவுடி தம்பி ராஜ் துப்பாக்கிகளை வாங்கி வந்தது தெரியவந்தது.
10 ஆண்டுகளாக துப்பாக்கி சப்ளை: அதை தொடர்ந்து தனிப்படை போலீஸார் பிஹார் சென்று இஸ்மாயிலை பிடித்து சென்னை அழைத்து வந்தனர். போலீஸார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், பிஹாரில் கட்டிட வேலை செய்துவரும் இஸ்மாயில் கடந்த 10 ஆண்டுகளாக சென்னைக்கு வந்து ரவுடிகளுக்கு துப்பாக்கிகளை சப்ளை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் இஸ்மாயிலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.