

சென்னை: சென்னையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண் உட்பட 4 பேரைபோலீஸார் கைது செய்தனர். சென்னை அசோக்நகரில் கஞ்சாவிற்பனை நடப்பதாக மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், அசோக் நகர் 100 அடி சாலையில் போலீஸார் நேற்று முன்தினம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு சந்தேகத்துக்கிடமாக பையுடன் நின்று கொண்டிருந்த இளைஞரை பிடித்து விசாரித்தனர். அவரது பையை சோதனை செய்தபோது அதில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது.
அவர், தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்த தினேஷ்குமார் (37) என்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீஸார், அவரிடம் இருந்து 15 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இதேபோல், தரமணி ரவுண்டானா அருகே ஆட்டோவில் கஞ்சாவை மறைத்து வைத்து விற்பனை செய்த மடிப்பாக்கத்தை சேர்ந்த வனிதா (36), சீனிவாசன் (37) ஆகியோரை கைது செய்த போலீஸார், அவர்களிடம் இருந்த 10.2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
மேலும், வண்ணாரப்பேட்டை பார்த்தசாரதி மேம்பாலத்தில் விற்பனைக்காக வைத்திருந்த 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸார், வியாசர்பாடியை சேர்ந்த சக்திவேல்(29) என்ற இளைஞரை கைது செய்தனர்.