

மதுரை: மதுரை - திருமங்கலம் அருகேயுள்ள மையிட்டான்பட்டியைச் சேர்ந்தவர் மருதுசேனை அமைப்பின் நிறுவனத் தலைவர் ஆதிநாராயணன்(55). இவர் நேற்று முன்தினம் கள்ளிக்குடி- கல்லுப்பட்டி சாலையில் உள்ள அவரது அலுவலகத்திலிருந்து, வீட்டுக்கு காரில் சென்றார்.
அப்போது, எதிரே வந்த கார் ஒன்று ஆதிநாராயணன் கார் மீது மோதியது. மேலும், அந்தக் காரில் வந்த கும்பல், ஆதிநாராயணன் வந்த காரை நோக்கி பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பியது. இதுகுறித்து கள்ளிக்குடி போலீஸில் ஆதிநாராயணன் புகார் அளித்தார்.
அதன் பேரில் சென்னையைச் சேர்ந்த சேகர் மற்றும் அவரது குடும்பத்தினர் உட்பட 26 பேர் மீது கொலை முயற்சி, ஆயுதம் வைத்திருத்தல், குண்டு வீசுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர். மேலும், அசம்பாவிதத்தை தடுக்கும் வகையில் மையிட்டான்பட்டியில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.