Published : 15 Mar 2024 04:04 AM
Last Updated : 15 Mar 2024 04:04 AM

மதுரை அருகே சொத்து தகராறில் தாயை கொன்று நாடகமாடிய மகள், மருமகன் உட்பட 5 பேர் கைது

அழகுபாண்டி, மதனகோபால், மதுசூதனன், சிவரஞ்சனி, ஜெயபிரகாஷ்

மதுரை: மதுரை அருகே சொத்து தகராறில் தாயின் கழுத்து நெரித்துக் கொன்றுவிட்டு, நாடகமாடிய மகள், மருமகன் உட்பட 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.

மதுரை மாவட்டம் செக்கானூரணியை அடுத்த தேன்கல்லுப்பட்டியைச் சேர்ந்தவர் செல்வம். அரசுப் போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்தார். இவரது மனைவி பரமேசுவரி ( 55 ). கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்பு செல்வம் உயிரிழந்த நிலையில், பரமேசுவரிக்கு வாரிசு அடிப்படையில் பழங்காநத்தம் பைபாஸில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனையில் சமையலர் பணி கிடைத்தது. அங்கு பணியாற்றியபோது, அதே போக்கு வரத்துக் கழகத்தில் பணிபுரிந்த நடத்துநர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.

இந்நிலையில், பரமேசுவரியின் மகள் சிவரஞ்சனிக்குத் திருமணம் நடந்தது. பின்னர், தனக்குப் பழக்கமான நடத்துநரின் மகனுக்கு சொத்துகளை எழுதிவைக்க பரமேசுவரி திட்டமிட்டதாகத் தெரிகிறது. இதையறிந்த சிவரஞ்சனி, தாய் பரமேசுவரியிடம் அடிக்கடி தகராறு செய்துள்ளார். கடந்த 10-ம் தேதி தேன்கல்லுப்பட்டிக்குச் சென்ற சிவரஞ்சனி, தாய் புதிதாகக் கட்டும் வீட்டை தனது பெயருக்கு எழுதிக் கொடுக்குமாறு வற்புறுத்தினார். இதற்கு பரமேசுவரி மறுத்ததால் ஆத்திரமடைந்த சிவரஞ்சனி, தனது கணவர் ஜெயப் பிரகாஷ் மற்றும் அவரது கூட்டாளிகளுடன் சேர்ந்து பரமேசுவரியைத் தாக்கினார்.

பரமேசுவரி

பின்னர் அவர் மயங்கி விழுந்ததாகக் கூறி, தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதனையில் அவர் உயிரிழந்தது தெரிந்தது. இது குறித்து செக்கானூரணி போலீஸார் நடத்திய விசாரணையில், பரமேசுவரி இறப்பில் சந்தேகம் எழுந்தது. அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை சேகரித்து விசாரித்தனர். இதில், சொத்துக்காக பரமேசுவரியை கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு, மயங்கி விழுந்து இறந்ததாக நாடகமாடியது தெரியவந்தது.

இதையடுத்து, சிவரஞ்சனி, அவரது கணவர் ஜெயப் பிரகாஷ், கூட்டாளிகளான நாகமலை புதுக்கோட்டை மதுசூதனன் ( 40 ), மதன கோபால் ( 28 ), அழகு பாண்டி ( 25 ) ஆகியோரைப் போலீஸார் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x