

மதுரை: மதுரை அருகே பார்வையற்ற பெண்ணை கொன்று நகையை பறித்த பக்கத்துவீட்டு பெண், அவரது ஆண் நண்பரை போலீஸார் கைது செய்தனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கவிதா ( 50 ). பார்வையற்ற மாற்றுத் திறனாளியான இவர், அரசு இசைப் பள்ளி ஆசிரியரான டேனியல் ஆறுமுகம் என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இவர்களது மகள் நான்சி, உசிலம்பட்டி பகுதியிலுள்ள பள்ளி ஒன்றில் படிக்கிறார். 3 ஆண்டுகளுக்கு முன்பு டேனியல் இறந்துவிட்டார். உசிலம்பட்டியில் உள்ள விடுதியில் தங்கிமகள் படிப்பதால், சிலைமான் சக்கிமங்கலம் அருகிலுள்ள அன்னை சத்யா நகர் பார்வையற்றோர் காலனியில் கவிதா வசித்தார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு காலை வெகுநேரமாகியும் கவிதா வீட்டைவிட்டு வெளியே வரவில்லை. சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கவிதா இறந்து கிடந்தார். இது தொடர்பாக சிலைமான் போலீஸார் விசாரித்தனர். நகைக்காக கவிதா கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. கவிதா வீட்டுக்கு அருகில் வசிக்கும் கலையரசியிடம் ( 30 ) சந்தேகத்தின் அடிப்படையில் போலீஸார் விசாரித்தனர்.
அவரது மொபைல் போனை ஆய்வு செய்தபோது, அவருக்கு பழக்கமான ஆண் நண்பர் சிவானந்தத்துடன் ( 21 ) நீண்ட நேரம் போனில் பேசியது தெரிய வந்தது. இருவரும் சேர்ந்து நகைக்காக கவிதாவை கொலை செய்திருப்பது தெரிந்தது. இதைத் தொடர்ந்து கலையரசி, எல்கேபி நகரைச் சேர்ந்த சிவானந்தம் ஆகியோரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸார் கூறியதாவது: கவிதாவின் பக்கத்து வீட்டில் வசிக்கும் கலையரசி, கணவர் இறந்த நிலையில் மகனுடன் வசித்துள்ளார். இவருக்கும், திருமணம் ஆகாத சிவானந்தத்துக்கும் பழக்கம் இருந்துள்ளது. கலையரசிக்கு கடன் இருந்துள்ளது. இந்த கடனை அடைக்க கவிதா அணிந்திருந்த நகைகளை கொள்ளையடிக்க கலையரசியும், சிவானந்தமும் திட்டமிட்டுள்ளனர். சம்பவ தினத்தில் கவிதா வெளியில் சென்றுவிட்டு, வீட்டுக்குள் வருவதற்கு முன்பு இருவரும் வீட்டுக்குள் சென்று காத்திருந்துள்ளனர்.
அவர் வீட்டுக்குள் வந்தவுடன் அவரது வாயை துணியால் பொத்தி நகையை பறிக்க முயன்ற போது, அவர் தடுமாறி கிழே விழுந்துள்ளார். தலையில் அடிப்பட்டு மயங்கிய நிலையில் இருந்த கவிதாவின் கை, கால்களை கட்டிப் போட்டு நகைகளை இருவரும் பறித்துச் சென்றுள்ளனர். தலையில் அடிபட்டதால் கவிதா உயிரிழந்து விட்டார். கலையரசி, சிவானந்தத்தை கைது செய்து, ரூ.1.30 லட்சம் மதிப்புள்ள நகைகளை பறிமுதல் செய்துள்ளோம் என்று கூறினர்.