வலி நிவாரணி மாத்திரைகள் போதைப் பொருளாக விற்பனை: கடலூரில் 4 இளைஞர்கள் கைது

கவியரசன், சுபாஷ், நிவாஸ், சிவக்குமார்
கவியரசன், சுபாஷ், நிவாஸ், சிவக்குமார்
Updated on
2 min read

கடலூர்: கடலூரில் வலி நிவாரணி மாத்தி ரைகளை மாணவர்களிடையே போதைப் பொருளாக விற்பனை செய்த 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கூரியர் மூலம் இதனை வரவழைத்து மாணவர்களிடையே சப்ளை செய்துள்ளனர்.

கடலூர் மாநகரில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இதில் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று காவல் துறையினர் தெரிவிக்கின்றனர். கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் வலி நிவாரணி மாத்திரைகளை போதை மருந்துகளாக மாற்றி கல்லூரி மாணவர்கள் பயன்படுத்துவது போலீஸாருக்கு தெரியவந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜா ராம் உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து, இந்த வலி நிவாரணி மாத்திரையை போதை மருந்தாக பயன்படுத்திய கல்லூரி மாணவர் ஒருவரை நேற்று போலீஸார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த மாணவர் தன்னுடைய நண்பர்கள் தனக்கு இதை வழங்கியதாக தெரிவித்தார். அடுத்தடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் இதே போல மேலும் 4 மாணவர்கள் சிக்கினர். இவர்கள், இந்த மாத்திரைகளை குறிப்பிட்ட நபர்களிடம் இருந்து வாங்கி, அதை பொடி செய்து, ‘டிஸ்டில்டு வாட்டரில்’ கலந்து, சிரிஞ் மூலம் ஏற்றி, போதைப் பொருளாக பயன்படுத்தி வந்துள்ளனர்.

இவ்வாறு செலுத்துவதன் மூலம் தாங்கள் அடுத்த 24 மணி நேரத்துக்கு ஒரு வித மயக்க நிலையில் இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து, வலி நிவாரணி மாத்திரையை மாணவர்களுக்கு போதைப் பொருளாக விற்பனை செய்த கடலூர் திருப்பாதிரிப்புலியூர், பாதிரிக்குப் பத்தைச் சேர்ந்த கவியரசன், கடலூர் செம்மண்டலத்தைச் சேர்ந்த சுபாஷ், செம்மண்டலம் நிவாஸ், கூத்தப் பாக்கத்தைச் சேர்ந்த சிவக்குமார் ஆகிய 4 பேரையும் போலீஸார் பிடித்து விசாரணை செய்தனர்.

இதில் இவர்கள் வலி நிவாரணி மாத்திரைகளை குறிப்பிட்ட நிறுவனத்தில் இருந்து நேரடியாக கூரியர் மூலம் தங்களுக்கு வரவழைத்து, தங்கள் மூலமாகவே போதைப் பொருள் போல கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. 10 மாத்திரைகளை ரூ.300க்கு வாங்கி, ஒரு மாத்திரையை ரூ.50 முதல் ரூ. 100 வரை ஆளுக்கு தகுந்தாற் போல், மாணவர்களை குறிவைத்து விற்பனை செய்துள்ளனர். மாத்திரைகளை சப்ளை செய்த 4 பேரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.

வலி நிவாரணி மாத்திரைகள் மற்றும் அதை பொடியாக்கி உடலில் ஏற்றப் பயன்படுத்திய சிரிஞ்சுகள்..
வலி நிவாரணி மாத்திரைகள் மற்றும் அதை பொடியாக்கி உடலில் ஏற்றப் பயன்படுத்திய சிரிஞ்சுகள்..

இந்த மாத்திரைகளை போதை மருந்துகளாக பயன்படுத்திய 5 மாணவர்களின் எதிர்காலம் கருதி, அவர்களை எச்சரித்து, அவர்களது பெற்றோரிடம் போலீஸார் ஒப்படைத்தனர். கைதான 4 பேரிடம் தொடர்ந்து விசாரணை மேற் கொண்டதில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களிடம் இந்த மாத்திரைகளை தொடர்ந்து வாங் கிச் செல்வதாக தெரிவித்துள்ளனர். அவர்களை கண்காணித்து உரிய உளவியல் மற்றும் நன்னெறி வழிகாட்டுதல் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாத்திரைகள் மொத்தமாக கூரியர் அலுவலகத்துக்கு பார்சலில் வந்துள்ளது. குறிப்பிட்ட கூரியர் அலுவலகத்திலும் போலீ ஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கல்லூரி மாணவர்களுக்கு வலி நிவாரணி மாத்திரைகளை போதை மருந்துகளாக வழங்கிய சம்பவம் கடலூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in