

நாக்பூர்: நெடுஞ்சாலை கொள்ளையர்கள் துப்பாக்கியில் சுட்டபோதும் காயமடைந்ததை பொருட்படுத்தாமல் 30 கிலோமீட்டர் தூரத்துக்கு டெம்போ டிராவலர் வேனை ஓட்டி வந்து பயணிகளின் உயிரை டிரைவர் காப்பாற்றினார். அவருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர் கோம்தேவ் கவாடே. டிரைவரான இவர் நேற்று முன்தினம் மகாராஷ்டிராவின் அமராவதி - நாக்பூர் நெடுஞ்சாலையில் டெம்போ டிராவலர் வேனை ஓட்டினார். இந்த வேன் அமராவதியிலிருந்து நாக்பூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. வேனில் 17 பயணிகள் இருந்தனர்.
தேசிய நெடுஞ்சாலை-6ல் இந்த வேன் வந்தபோது, பின்தொடர்ந்து வந்த காரிலிருந்து இறங்கிய சில நபர்கள் வேனை நிறுத்துமாறு வழிமறித்தனர். ஆனால், வேனை டிரைவர் கவாடே நிறுத்தாமல் ஓட்ட முயன்றபோது அவரை நோக்கி கொள்ளையர் துப்பாக்கியால் சுட்டனர்.
இதில் டிரைவர் கவாடேவுக்கு கையில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டது. ஆனால் காயம் அடைந்ததை பொருட்படுத்தாமலும், கொள்ளையர்களுக்கு பயப்படாமலும் வண்டியை நிறுத்தாமல் 30 கிலோமீட்டர் தூரத்துக்கு ஓட்டினார் கவாடே. பின்னர் அந்த வழியில் இருந்த போலீஸ் நிலையத்தில் வேனை நிறுத்தி கொள்ளையர்கள் குறித்து டிரைவர் கவாடே புகார் செய்தார்.
கொள்ளையர்கள் சுட்டதில் வேனில் இருந்த மேலும் 3 பயணிகள் காயமடைந்தனர். இவர்கள் 4 பேரும் டிவ்சா பகுதியிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். உத்தரபிரதேச மாநில பதிவெண் கொண்ட காரில் கொள்ளையர்கள் வந்தது விசாரணையில் தெரியவந்தது.
சமூக வலைதளங்களில் பாராட்டு: இதுகுறித்து டிரைவர் கவாடே கூறும்போது, “அமராவதியிலிருந்து நாங்கள் வாகனத்தில் வந்தபோது இந்த சம்பவம் நடந்தது. அவர்கள் எங்களை நீண்ட தூரம் காரில் பின்தொடர்ந்து வந்துள்ளனர். அந்த வாகனம் உ.பி.யை சேர்ந்தது. ஆனால் அதன் பதிவெண் எனக்கு நினைவில் இல்லை. இதுதொடர்பாக போலீஸில் புகார் கொடுத்துள்ளோம்” என்றார்.
இதுதொடர்பாக மகாராஷ்டிர போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். துப்பாக்கியால் சுடப்பட்டு காயமடைந்த போதும் பயப்படாமல் பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய டிரைவருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.