

சென்னை: சென்னை விருகம்பாக்கம் நடேசன் நகர் பகுதியை சேர்ந்தவர் ஆகாஷ்ராஜ் (18). ராமாபுரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ. 2-ம் ஆண்டு படிக்கிறார். இவர் கடந்த 11-ம் தேதி, வழக்கம்போல வீட்டில் இருந்து கல்லூரிக்கு இருசக்கர வாகனத்தில் புறப்பட்டுச் சென்றார். ராமாபுரம் ஆறுமுகம் தெருவில் சென்றபோது, வாகனம் நிலைதடுமாறி, தடுப்பின் மீதுமோதியது. கீழே விழுந்த ஆகாஷ்ராஜின் கை, கால்களில் காயம் ஏற்பட்டது.
அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர், அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாக கூறி, ஆகாஷ்ராஜை தங்கள் வாகனத்தில் ஏற்றிக் கொண்டனர்.
ஆனால், மருத்துவமனைக்கு செல்வதற்கு பதிலாக, ராமாபுரம் பூதப்பேடு பகுதியில் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு சென்ற அவர்கள், கத்திமுனையில் மிரட்டி, ஆகாஷ்ராஜ் அணிந்திருந்த 6 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பினர்.
காயமடைந்த நிலையில் வலியால் தவித்த ஆகாஷ்ராஜை அங்கிருந்தவர்கள் மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சைக்கு பிறகு, வழிப்பறி குறித்து ராமாபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.