

மதுரை: மதுரையில் தனியார் கூட்டுறவு சொசைட்டி என்ற பெயரில் பொதுமக்கள் 10 ஆயிரம் பேரிடமிருந்து வசூலித்த ரூ.50 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளதை அடுத்து பாதிக்கப்பட்டவர்கள் காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று புகார் அளித்தனர்.
மத்திய அரசிடம் அனுமதி பெற்றதாகக் கூறி, கடந்த 2013-ல் ஓரு தனியார் கூட்டுறவு சொசைட்டி நிறுவனம் மதுரையை தலைமையிடமாகக் கொண்டு தொடங்கப்பட்டது. இதன் கிளை அலுவல கங்கள் தேனி, திண்டுக்கல், விருதுநகர், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருச்சி, கேரளா, கர்நாடகா மாநிலங்களிலும் திறக்கப்பட்டன. இதில் வங்கி வேலை என்ற பெயரில் விளம்பரம் செய்து ஆட்களையும் தேர்வு செய்தனர். இந்நிறுவனத்தில் பணி அமர்த்தப்பட்ட மேலாளர் முதல் அனைத்து விதமான ஊழியர் களிடமும் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரை பாதுகாப்பு முன்வைப்புத் தொகை என்ற பெயரில் வசூலித்துள்ளனர்.
இதற்காக, வங்கி காசோலை ஒன்றும் வழங்கப்பட்டது. ஒவ்வொரு சொசைட்டி கிளை அலுவலகத்துக்கும் 15 பேர் வரை வேலையில் அமர்த்தப்பட்டனர். இவர்கள் மூலம் சிறு சேமிப்பு, தொடர் வைப்பு ( ஆர்டி ), நிரந்தர வைப்புத் தொகை ( எஃப்டி ) போன்ற திட்டங்கள் மூலம் பல் லாயிரம் வாடிக்கையாளர்களை சேர்த்துள்ளனர். இதில் தினசரி, வாராந்திர மற்றும் மாதாந்திர சேமிப்புத் திட்டங்கள் மூலம் பல்வேறு கவர்ச்சிகரமான வட்டி விகிதங்கள் அறிவிக்கப்பட்டு, ஆயிரக்கணக் கான வாடிக்கையாளர்களை சேர்த்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த ஆண்டு முதல் வாடிக்கையாளர்களுக்கு உரிய வட்டிப் பணம் சென்று சேரவில்லை. ஊழியர்களுக்கு ஊதியமும் வழங்கப்பட வில்லை. நிறுவன அலுவலகங்களும் மூடப்பட்டன. தற்போது, பாதிக்கப் பட்டோர் காவல் நிலையங்களில் புகார் அளித்து வருகின்றனர். மதுரையிலுள்ள இதன் 3 அலுவலகங்களும் மூடப்பட்டதால், அங்கு பணியாற்றிய ஊழியர்களும், சொசைட்டியில் பணம் செலுத்திய வாடிக்கையாளர்களும் என 30-க்கும் மேற்பட்டோர், மதுரை மாநகரக் காவல் ஆணையர் அலு வலகத்தில் நேற்று திரண்டனர். அவர்கள் ஆணையரிடம் புகார் அளித்தனர். அதில் தங்களது பணத்தை மீட்டு தரும்படி வலியுறுத்தியுள்ளனர்.
இது குறித்து பாதிக்கப்பட்டோர் கூறியது: இதில் சேர்ந்துள்ள ஒவ்வொரு வாடிக்கையாளரும் ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை முதலீடு செய்துள்ளனர். சிலுக்குவார் பட்டியில் சொசைட்டி நிறுவனத்துக்கு சொந்தமான இடம் இருக்கிறது. அதை விற்று பணத்தை திருப்பித் தருவதாக உறுதி அளித்தனர். எதுவும் நடக்க வில்லை, யாரையும் தொடர்புகொள்ள முடியவில்லை. மதுரை மண்டலத்தில் மட்டும் ரூ.50 கோடி அளவுக்கு 10 ஆயிரம் வாடிக்கையாளர்கள், ஊழியர்களிடம் மோசடி நடந்திருக்கலாம் எனக் கூறினர்.